தளவாய் சுந்தரத்தை
தட்டி வைக்கும் எடப்பாடி..
அதிமுகவின் அமைப்புச் செயலாளராக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த நாஞ்சில் வின்சென்ட்டை செப்டம்பர் 1 ஆம் தேதி நியமித்திருக்கிறார் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
இந்த நியமனம் குமரி அதிமுக வட்டாரங்களில் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து குமரி அதிமுக நிர்வாகிகளிடம் அரசியல் டுடே சார்பாக பேசினோம்.
”அதிமுகவில் இப்போது குமரி மாவட்டத்தில் இருந்து அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன், அமைப்புச் செயலாளராக தளவாய் சுந்தரம் ஆகியோர்தான் மாநிலம் தழுவிய பொறுப்புகளில் உள்ளனர்., இவர்களில் அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் தற்போது உடல் நல பிரச்சினையால் கட்சிப் பணிகளில் பெரிதாக ஈடுபடுவதில்லை.
அமைப்புச் செயலாளராக இருக்கும் முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம்தான் இப்போது அதிமுகவில் ஆக்டிவ் புள்ளி. இந்நிலையில் எம்.ஜி.ஆர். காலத்தில் எம்.ஜி.ஆர் அமைச்சரவையில் துணை அமைச்சராக இருந்த நாஞ்சில் வின்சென்ட் திடீரென இப்போது அமைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டிருப்பதுதான் கட்சியினர் மத்தியில் கேள்விகளாக உயர்ந்து நிற்கிறது.
எம்ஜிஆர் அதிமுக என்ற அரசியல் கட்சியை தொடங்கியதும், தென்மாவட்டத்தில் இருந்து உடனடியாக எம்ஜிஆர் உடன் கை கோர்த்தது ஜி.ஆர். எட்மண்ட். குமரி மாவட்டம் எம்ஜிஆர் தலைமை மன்ற தலைவராக இருந்த தமிழ் மகன் உசேன். அதனை தொடர்ந்து நாஞ்சில் கி. மனோகரன் ஆகியோர்.
இந்த காலகட்டத்தில் தான் தமிழக சட்டமன்ற கூட்டம் நடந்துகொண்டிருந்த போது, பார்வையாளர்கள் மாடத்தில் அமர்ந்திருந்த ஒருவர் எம்ஜிஆர் பற்றிய புகழ் பாடும் 100_க்கும் அதிகமான நோட்டீஸ்களை சட்டமன்ற உறுப்பினர் இருந்த பகுதியில் வீசினார். சட்டமன்ற விசிறி காற்றில் பறந்த நோட்டீஸ் பரவலாக சட்டமன்றத்தில், ஆளும் கட்சி, எதிர் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை தேடிச் சென்று கீழே விழுந்தது. அந்த இளைஞர்தான் நாஞ்சில் வின்சென்ட்..
நாஞ்சில் வின்சென்ட் செயல் அன்றைய மாலை பத்திரிகைகளில் பரபரப்பு செய்தியாக வெளியானது. எம்ஜிஆர் யார் அந்த தம்பி அழைத்து வாருங்கள் என்று வின்சென்ட்டை கூப்பிட்டு சந்தித்தார்.
இதன் பின் நாஞ்சில் வின்சென்ட்டுக்கு நாகர்கோவில் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கினார் எம்.ஜி.ஆர். அதில் வெற்றி பெற்ற வின்சென்ட் பார்வையாளர் மாடத்தில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக அமர்ந்தார்.
அதுமட்டுமல்ல… எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் நிதி அமைச்சர் நாஞ்சில் கி.மனோகரன் இருக்க, அவருக்கு துணையாக இணையமைச்சர் என்ற பதவியை மத்திய அமைச்சரவையில் இருப்பது போல மாநில அமைச்சரவையில் உருவாக்கி அதில் வின்சென்ட்டை அமரவைத்தார் எம்.ஜி.ஆர். தமிழ்நாடு அரசில் அதற்கு முன்னும் பின்னும் இணையமைச்சர் என யாரும் பதவி வகிக்கவில்லை.
நாஞ்சில் வின்சென்ட் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினர் ஆனார். மேலும் ஜெயலலிதா நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக இருந்த காலத்தில் நாஞ்சில் வின்சென்ட்டும் நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக டெல்லிக்கு சென்றார்.
இப்படி எம்.ஜி.ஆருக்கும் ஜெயலலிதாவுக்கும் நன்கு அறிமுகமானவர் நாஞ்சில் வின்சென்ட். ஆனபோதும் ஜெயலலிதா காலத்தில் கட்சியில் எவ்விதமான முக்கிய பதவியும் இல்லாத நிலையில். நாஞ்சில் வின்சென்ட் பார்வை பொறியியல் கல்லூரி, பள்ளி என அவரது கவனம் திரும்பியது.
இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அமைப்புச் செயலாளராக நியமனம் செய்து நாஞ்சில் வின்சென்ட்டுக்கு ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
ரோமன் கத்தோலி கிறிஸ்துவ நாடார் சமுதாயத்தைச் சேர்ந்த நாஞ்சில் வின்சென்ட்டுக்கு மாநிலப் பொறுப்பு கொடுத்ததன் மூலம் குமரியில் அதிமுகவின் சிறுபான்மை வாக்குகளை இழந்து வருவதை சரிக்கட்டலாம் என்று நினைக்கிறார் எடப்பாடி.
அதுமட்டுமல்ல… சமீபகாலமாக தளவாய் சுந்தரம் பாஜகவினருடன் அதீத நெருக்கம் காட்டி வருகிறார். கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறாரோ இல்லையோ பாஜகவினருடன் அதிகம் தலைகாட்டுகிறார்.
இந்நிலையில் தளவாய் சுந்தரத்தை தட்டி வைக்கும் வகையில்தான் எம்.ஜி.ஆர். காலத்து கிறிஸ்டியன் நாடார் ஆளுமையான நாஞ்சில் வின்சென்ட்டை எடப்பாடி களமிறக்கியுள்ளார்” என்கிறார்கள் குமரி அதிமுகவினர்.
