ஓணம் பண்டிகை நாளை நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு, கோவையில் இருந்து கேரளாவிற்கு செல்வோரின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்து உள்ளது.

கோவை, உக்கடம் மற்றும் காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து இன்று பிற்பகல் முதலே பயணிகள் கூட்டம் அலைமோதும் நிலையில் காணப்பட்டது.
மேலும், ஓணம் பண்டிகை நாட்களோடு இணைந்து வார இறுதி நாட்களும், மிலாதி நபி பண்டிகையும் வருவதால் தொடர் விடுமுறை கிடைத்து உள்ளது. இதனை அடுத்து கேரளாவைச் சேர்ந்த கல்லூரி மாணவ – மாணவிகள் கோவையில் அதிக அளவில் பயின்று வருகின்றனர். அவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் ஊருக்கு திரும்புவதாலும், பொதுமக்கள் பெருமளவில் சொந்த ஊர்களுக்கும் சுற்றுலா தலங்களுக்கும் செல்ல படையெடுத்து உள்ளனர். இதனால் மாநகரம் முழுவதும் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு உள்ளது.

இதனால், கோவை நகரில் உள்ள பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
மேலும் குறைந்த அளவில் பேருந்துகள் இயக்குவதால் பயணிகள் சொந்த ஊர் செல்வதற்கு சற்று தாமதம் ஏற்படுவதாக அங்கு வரும் பயணிகள் குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.




