அரியலூர் மாவட்டம், அரியலூர் நகராட்சி, தூய மேரி தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கத்தினை போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தொடங்கி வைத்து, மாணாக்கர்களுக்கு உணவினை வழங்கி, மாணாக்கர்களுடன் அமர்ந்து உணவருந்தினார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் பொ.இரத்தினசாமி, தலைமை வகித்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை, மயிலாப்பூர், புனித சூசையப்பர் தொடக்கப் பள்ளியில் நகரப் பகுதிகளில் உள்ள அரசு உதவிப்பெறும் பள்ளிகளுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கத்தை தொடங்கி வைத்ததை தொடர்ந்து அரியலூர் நகராட்சி தூய மேரி தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்க த்தினை தொடங்கி வைத்து மாணாக்கர்களுக்கு உணவினை வழங்கி, மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார். அந்தவகையில் அரியலூர் மாவட்டத்தில் நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் உள்ள அரசு உதவிப்பெறும் 12 பள்ளிகளில் பயிலும் 2,627 மாணாக்கர்கள் பயன்பெறும் வகையில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள 537 அரசு / அரசு உதவிப்பெறும் தொடக்கப்பள்ளி / நடுநிலை ப்பள்ளிகளில் பயிலும் 29,206 மாணவ, மாணவிகளுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் வாயிலாக காலை சிற்றுண்டி வழங்கப்பட்டு பயன்பெறுகின்றனர்.

முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தின் வாயிலாக பயன்பெறும் மாணவர் தருண் தெரிவிக்கையில் எனது பெயர் தருண். நான் பார்ப்பனச்சேரி கிராமத்தில் இருந்து வருகிறேன். நான் தூய மேரி தொடக்கப்ப ள்ளியில் படித்து வருகிறேன். எங்கள் பள்ளியில் இன்று எங்களுக்கு முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தின் கீழ் எங்களுக்கு கேசரி, பொங்கல் ஆகிய உணவுகள் வழங்கப்பட்டது. உணவு நன்றாக இருந்தது. பள்ளியில் காலையிலும் தினமும் எங்களுக்கு உணவு வழங்குவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இத்திட்டத்தினை வழங்கிய தமிழ்நாடு அரசுக்கு நன்றி என மாணவர் தருண் என்பவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் முனைவர்.ஆ.ரா.சிவராமன், அரியலூர் நகர திமுக செயலாளர் இரா.முருகேசன், நகர்மன்றத் தலைவர் சாந்தி கலைவாணன், அரியலூர் நகர்மன்றத் துணைத் தலைவர் கலியமூர்த்தி, அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் கோவிந்த ராஜ், வருவாய் வட்டாட்சியர் முத்துலட்சுமி, மாவட்ட நிலை அலுவலர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.