தமிழ்நாட்டில் நிலத்தடி நீர் பாதிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2011-ம் ஆண்டு ஜனவரி மாதம் துணை முதலமைச்சராக இருந்த போது ஆழ்துளை கிணறு அமைத்து இதற்கான ஆய்வு பணிகள் துவங்க பரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். மேலும் தற்போதைய தி.மு.க ஆட்சியிலும் சிவகங்கை, ராமநாதபுரத்தில் ஹைட்ரோ கார்பன் எண்ணெய் கிணறுகள் அமைக்க மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலம் மக்களுக்கு தீங்கு விளைவித்துள்ளார் என முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான என்.தளவாய்சுந்தரம் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான
.தளவாய்சுந்தரம் இன்று (25-08-2025) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஹைட்ரோ கார்பன் என்பது கார்பன் மற்றும் ஹைட்ரஜன் சேர்ந்து உருவான இயற்கை பொருளாகும். பெட்ரோல், டீசல் எரிவாயு போன்றவற்றின் அடிப்படை மூலப்பொருளாக இவை உள்ளது. பல கோடி கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு கடல், ஏரி, ஆறு போன்ற இடங்களில் இருந்த தாவரங்கள், உயிரினங்கள் சிதைந்து மண், பாறைகளின் அடியில் புதைந்து போய்விட்டன. அது கால மாற்றத்தால் அதிக அழுத்தம் மற்றும் அதிக வெப்பம் காரணமாக அவை ஹைட்ரோ கார்பனாக மாறிவிடும்.

இந்த ஹைட்ரோ கார்பனை கண்டறிய பூமிக்குள் ராட்சத துளையிடும் கருவி மூலம் 3 ஆயிரம் மீட்டர் ஆழம் வரை தோண்டப்படும். அப்போது மண் விழுந்து கொண்டு செல்லாமல் இருக்க ஸ்டீல் குழாய்கள் பொருத்தப்படும். அழுத்தத்தை கட்டுப்படுத்தவும், கிணற்றை நிலை நிறுத்தவும் ‘‘டிரில்லிங் மட்” எனப்படும் ரசாயன கலவைகள் பயன்படுத்தப்படும். ஹைட்ரோ கார்பனுக்காக ஒரு கிணறு தோண்டும் போது அப்பகுதியை சுற்றி 3 கிலோ மீட்டர் தூரம் வரை நிலத்தடி நீர் பாதிக்கப்படும். 5 கிலோ மீட்டர் தூரம் வரை காற்று மாசுபடும், 3 கிலோ மீட்டர் வரை சத்தம் அதிகமாக இருக்கும். மேலும் சுற்றுச்சூழல் மற்றும் வேளாண்மை பெரிதும் பாதிக்கப்படும். இதனடிப்படையில் விவசாயிகள், மீனவர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தை பொறுத்தமட்டில் குமரி ஆழ்கடல் பகுதியில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி அளிக்க கூடாது என மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். குளச்சல் அருகே குறும்பனை கடற்கரை கிராமத்தில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்தம் செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் ராமநாதபுரத்தில் எண்ணெய் கிணறுகள் அமைக்க சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் (State Environment Impact Assessment Authority) அனுமதி வழங்கி உள்ளது. மக்களுக்கு கேடு விளைவிக்கும் இத்திட்டத்தை தமிழ்நாட்டில் எந்த பகுதியிலும் அனுமதிக்க கூடாது என அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் இத்திட்டத்தால் மக்களுக்கு பல்வேறு கேடுகள் ஏற்படும். குறிப்பாக நிலத்தடி நீர் மாசுபடுதல், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுதல், கடல் வாழ் உயரினங்கள் பாதிப்பு ஏற்படுதல், காற்று மாசுபடுதல் இதனால் மக்களின் வாழ்வாதாரங்கள் பேரிழப்பை சந்தித்தல் போன்ற இடர்பாடுகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். மக்களின் நலன் கருதி ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழ்நாட்டில் எந்த பகுதியிலும் நிறைவேற்றக் கூடாது என அரசை மீண்டும் வலியுறுத்தி இதற்கான உரிய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.
மேலும் டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது குறித்து திமுக-வினர் உண்மைக்கு மாறாக பிரச்சாரம் செய்கிறார்கள். இதனை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்கள் குறித்து மத்திய அரசுக்கு, அரசு தெரியப்படுத்தவில்லை என்பது பொய்யான தகவல். இது போன்று சொல்பவர்களின் செயல் கேவலமான செயல். காங்கிரஸ் எம்.பி அவர்கள், டெல்டா மாவட்டங்களை சிறப்பு வேளாண் மண்டலமாக தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்கவும், எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வுத் திட்டங்களை தடை செய்யவும் மத்தியக் கொள்கை ஏதேனும் உள்ளதா? என்று கேட்டதற்கு, அப்படி எந்தத் திட்டமும் இல்லை என்றும், இதுவரை அது தொடர்பாக எந்த கோரிக்கையையும் மாநில அரசு வைக்கவில்லை என்றும் தான் கூறியுள்ளனர்.
மாநில அரசு சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்த இடங்களுக்கு ஒப்புதல் வாங்கவில்லை என்று எங்கும் கூறவில்லை. மாறாக, மாநில அரசின் முடிவின் காரணமாக மயிலாடுதுறை முதல் தஞ்சை வரை எந்த ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கும் புதிதாக அனுமதி வழங்கப்படவில்லை என்று கூறியிருக்கிறது மத்திய அரசு. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் தொடர்பாக மாநில அரசு தனியாக அரசாணையே வெளியிட்டுள்ள போது, அதற்கு ஆளுநரும் ஒப்புதல் அளித்துள்ளார். அதன் பிறகு அது அரசிதழிலும் வெளியாகி இருக்கிறது. இதற்காக தனிச் சட்டம் ஒன்றும் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதல் பெறப்பட்டு இருக்கிறது.
மாண்புமிகு சட்டமன்ற எதிர்கட்சித்தலைவர், கழகப் பொதுச் செயலாளர் அவர்கள் 2020-ம் ஆண்டு தமிழக முதலமைச்சராக இருந்த போது, திமுக அரசு தமிழகத்தில் ஆட்சியில் இருந்த போது தமிழக விவசாயிகளின் நலனில் சிறிதும் அக்கறையில்லாமல், டெல்டா விவசாயிகளுக்கு எதிராக மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களால் விவசாயம் பாதிக்கப்பட்டு, தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்றழைக்கப்படும் காவிரி ஆறு பாயும் டெல்டா பகுதிகள் பாலைவனமாகக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டது. எனவே டெல்டா மாவட்டங்களில் வேளாண்மை பாதிக்கப்படக்கூடாது என்று அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடியார் அவர்கள் 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 20-ம் தேதி அன்று சட்ட மன்றத்தில் ‘பாதுகாக்கப்பட்ட காவேரி டெல்டா வேளாண் மண்டலத்திற்கான ஒரு தனிச் சட்டத்தினை” தாக்கல் செய்து அன்றே நிறைவேற்றப்பட்டது. பிறகு, தமிழ்நாடு ஆளுநர் அவர்களின் ஒப்புதல் பெற்று இதை முறைப்படி மாநில அரசிதழில் 21.2.2020 அன்று வெளியிடப்பட்டது.

1996-ஆம் ஆண்டு ராஜஸ்தான் பாலைவனத்தில் மீத்தேன் எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டது. அதை அறிந்த அப்போதைய பெட்ரோலியத் துறை இணை அமைச்சர் திரு. டி.ஆர்.பாலு, இத்திட்டத்தை தமிழ்நாட்டின் டெல்டா பகுதியில் செயல்படுத்த முடிவெடுத்து, 2010ல் மத்திய அரசின் ஒப்புதலைப் பெற்றார்.
அதே போல ஆழ்துளை கிணறு அமைத்து ஆய்வுப் பணி துவங்க, நான்கு ஆண்டுகளுக்கு கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேசன் நிறுவனத்திற்கு 2011 ஜனவரி மாதத்தில் அனுமதி அளித்தது திமுக அரசு தான். அதுவும் தற்போதைய முதல்வர் திரு. ஸ்டாலின் அவர்கள் அன்றைய துணை முதலமைச்சராக இருந்த போது அவர்கள் முன்னிலையில் தான் 4.1.2011 அன்று சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
அந்த ஒப்பந்தத்தில், இத்திட்டத்திற்கான அனைத்து உதவியையும் தமிழ்நாடு அரசு செய்யும் என்று அப்போதைய திமுக அரசு கூறியது.
தமிழ்நாட்டில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கிணறுகளுக்கு சுற்றுச் சூழல் இசைவாணை முதன் முதலில் 2008-ல் நாகப்பட்டினம் மாவட்டத்தில் திமுக ஆட்சிக் காலத்தில் தான் வழங்கப்பட்டுள்ளது.
அதேபோன்று 2010ம் ஆண்டு, கடலூர், ராமநாதபுரம், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் ஏழு கிணறுகளுக்கு திமுக ஆட்சிக் காலத்தில்தான் இசைவாணை வழங்கப்பட்டுள்ளது.
2011ல் நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் 5 கிணறுகளுக்கு திமுக ஆட்சிக் காலத்தில்தான் இசைவாணை வழங்கப்பட்டுள்ளது.
2014ஆம் ஆண்டு டெல்டா பகுதிகளில் நிலக்கரி படுகை அடிப்படையிலான மீத்தேன் எடுக்கும் திட்டத்தால் ஏற்படும் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழுவை மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அமைத்தார்கள்.
அத்தோடு நிபுணர் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் காவேரி டெல்டா பகுதிகளில் மேற்கொள்ளப்படும் மீத்தேன் திட்டத்தை நிறுத்த வேண்டும் என்றும், இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்துவதற்கு முன்பு மத்திய அரசு மாநில அரசிடம் ஆலோசனை நடத்த வேண்டும் என்றும் 8.10.2015 அன்று கேட்டுக் கொண்டார்கள். இதனை மத்திய அரசும் ஏற்றுக் கொண்டது.
‘‘விவசாயி சேற்றில் கால் வைத்தால் தான், நாம் சோற்றில் கை வைக்க முடியும்”
காவேரி டெல்டா பகுதி ஆழ்துளை மூலமும் கிணறு மூலமும் பாசனம் செய்யும் விவசாயப் பகுதியாக உள்ளதால், ஹைட்ரோ கார்பன் திட்டங்களால் நிலத்தடி நீருக்கு பாதிப்பு ஏற்படுவதோடு அங்கு ஏற்படுத்தப்படிருக்கும் ஆழ்துளை கிணறுகளுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும். நிலத்தடி நீர் வெளியேற்றப்பட்டால் கடல் நீர் உட்புக வாய்ப்புள்ளது.
காவேரி டெல்டா பகுதி சதுப்பு நிலக்காடுகள் அமைந்துள்ள பகுதியாகும். இவ்வகை திட்டங்களால் சுனாமி போன்ற பேரழிவுக்கு அரணாக விளங்குகின்ற சதுப்பு நிலக்காடுகள் பாதிக்கப்படும்.
காவேரி டெல்டா பகுதியானது, தொல்லியல் மற்றும் கலாச்சார பாரம்பரியமிக்க மண்டலமாகும். ஹைட்ரோ கார்பன் திட்டங்களால் கலாச்சார பாரம்பரிய சின்னங்கள் சேதம் அடையும் ஆபத்து உள்ளது.
9.2.2020 அன்று தலைவாசலில் நடந்த கால்நடைப் பூங்கா நிகழ்ச்சியில் காவேரி டெல்டா மாவட்டங்கள் மற்றும் சில டெல்டா பகுதிகளை ‘பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றப்படும்” என அன்றைய முதலமைச்சர் எடப்பாடியார் அவர்கள் அறிவித்தார்கள்.
இந்திய அரசியலமைப்பின் அட்டவணை VII-ன்படி வேளாண்மை மாநில பட்டியலில் உள்ளது. எனினும் வேளாண் பெருமக்களின் நம்பிகைக்கு பாத்திரமாக விளங்கும் அம்மாவின் அரசு, சட்ட வல்லுநர்களை கலந்தாலோசித்து, தகுந்த வழிமுறைகளையும் ஆராய்ந்து 10-02-2020 அன்று மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் (திரு. பிரகாஷ் ஜவ்டேகர்) அவர்களுக்கு எடப்பாடியார் அவர்கள் கடிதம் எழுதினார்கள்.
அக்கடிதத்தை அன்றைய மீன்வளத்துறை அமைச்சர் திரு.டி.ஜெயக்குமார் அவர்களும், தமிழக உயர் அதிகாரிகளும், மத்திய வனம் திரு. ககன்தீப் சிங் பேடி (வேளாண் செயலாளர்) திரு. முருகானந்தம் (தொழில்துறை செயலாளர்) ஆகியோர் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அவர்களிடம் நேரடியாக வழங்கினார்கள்.
இந்திய அரசியலமைப்புச் சட்ட அட்டவனை VII-ன்படி வேளாண்துறை மாநில பட்டியலில் உள்ளதால் மாநில அரசே சட்டம் இயற்றலாம்.
இதன்படி 20.01.2020 அன்று சட்ட சபையில் ‘’பாதுகாக்கப்பட்ட காவேரி டெல்டா வேளாண் மண்டலத்திற்கான ஒரு தனிச் சட்டத்தினை” தனித்தீர்மானமாக அன்றைய முதலமைச்சர் எடப்பாடியார் அவர்கள் அறிமுகம் செய்தார்கள். தமிழ்நாடு ஆளுநர் அவர்களின் ஒப்புதல் பெற்று இதை மாநில அரசிதழில் 21.2.2020 அன்று முறைப்படி வெளியிடப்பட்டது.
இச்சட்டத்தின் அட்டவணை இரண்டில் எந்ததெந்த தொழில்கள் செய்ய கூடாது என்று பட்டியலிட்டுள்ளது. அதில் ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் இடம் பெற்றுள்ளது.
அதற்கு முன்னோடியாக பிப்ரவரி 2020-ம் ஆண்டு டெல்டா மாவட்டங்கள் அனைத்தையும் விவசாய முக்கியத்துவம் வாயந்த பகுதியாக ஆணையிட்டு உள்ளார்கள். இதனடிப்படையில், இனி ஒரு போதும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை இந்த காவேரி டெல்டா பகுதிகளில் அமைக்க முடியாது. அதே போல பட்டியலில் இடப்பட்ட இனங்களை நீக்கவோ, புதியதாக ஒன்று அல்லது பல இனங்களை சேர்க்கவோ மாநில அரசுக்கு முழு அதிகாரம் இச்சட்டத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது.
ஒஎன்ஜிசி நிறுவனம் தி.மு.க ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை டெல்டா பகுதிகளில் செயல்படுத்த மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் மனு கொடுக்கப்படுகிறது.
இம்மனு நடவடிக்கைக்காக முதலமைச்சர் திரு. மு.கஸ்டாலின் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட போது, ஏற்கனவே டெல்டா பகுதிகளில் இத்திட்டத்தை செயல்படுத்த கூடாது என அன்றைய முதலமைச்சர் எடப்பாடியார் அவர்கள் பாதுகாக்கப்பட்ட காவேரி டெல்டா வேளாண் மண்டலமாக அறிவித்துள்ளார்கள். இதனால் இப்பகுதியில் செயல்படுத்த முடியாது என முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் கூறிவிட்டார்கள்.
அம்மாவின் அரசு ‘‘பாதுகாக்கப்பட்ட காவேரி டெல்டா வேளாண் மண்டலத்திற்கான ஒரு தனிச் சட்டத்தினை” நிறைவேற்றியதன் காரணமாக எடப்பாடியார் தலைமையிலான ஆட்சியில் வேளாண்மையை பாதிக்கக்கூடிய எந்த புதிய திட்டங்களும் டெல்டா மாவட்டங்களில் தொடங்கப்படவில்லை.
ஹைட்ரோ கார்பன் கிணறுகள் மூலம் சுற்றுச்சூழலுக்கு பேராபத்து ஏற்படும் என பேரா.சுல்தான் இஸ்மாயில் தலைமையிலான நிபுணர் குழு அரசிடம் 2022-ம் வருடம் பிப்ரவரி மாதம் அறிக்கை அளித்தது. இதுவரை அந்த அறிக்கையினை அரசு வெளியிடவில்லை. யாருடைய நலனை காப்பதற்காக இந்த அறிக்கை மூடி மறைக்கப்படுகிறது. இந்த அறிக்கையினை அரசு வெளியிடுவதோடு, அதனடிப்படையில் ஏற்கனவே செயல்பட்டு வரும் ஹைட்ரோ கார்பன் கிணறுகளை மூடிவிட வேண்டும். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டத்தை பிற மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தி சுற்றுச்சூழல் பேராபத்து நிகழ்வதிலிருந்து தமிழகத்தை பாதுகாத்திட வேண்டும். மக்கள் நலன் காக்கப்படவும், சுற்றுச்சூழல் பேரழிவு தடுக்கப்படவும், விவசாயம் காக்கப்படவும், நிலத்தடி நீர் பாதிப்பை போக்கவும், மீனவர் நலன் பாதுகாக்கவும், இத்தகைய அழிவு திட்டங்களுக்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

தி.மு.க ஆட்சியில் 11.01.2022 அன்று மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையக் குழு அமைக்கப்பட்டது. உறுப்பினர்களின் பதவி காலம் 3 ஆண்டுகள் ஆகும். 31.10.2023 அன்று ஒஎன்ஜிசி நிறுவனம் மனு கொடுத்தது. அம்மனுவினை அன்றே தி.மு.க அரசு நிராகரித்திருக்க வேண்டும். அப்போது அதை செய்ய தவறி விட்டதால், இப்போது ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பழைய குழுவின் பதவி காலம் முடிந்தவுடன் தற்போதைய தி.மு.க ஆட்சியில் புதிய குழு 6.03.2025 அமைக்கப்பட்டது. ஆணைய குழு உறுப்பினர்கள் மூலம் பரிந்துரைக்கப்பட்டு தற்போதைய முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான அரசு ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் (State Environment Impact Assessment Authority) மூலம் சுற்றுச்சூழல் அனுமதி 2025 மார்ச் 11 அன்று வழங்கி மக்களுக்கு துன்பம் விளைவித்துள்ளது. ஒஎன்ஜிசி நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட இதற்கான சுற்றுச்சூழல் அனுமதியினை அரசு ரத்து செய்ய வேண்டும். நிர்வாகத்தில் முறையான கவனம் செலுத்தாமலும், அக்கறை இல்லாததாலும் இந்த சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தி.மு.க அரசு இதுபோன்ற தவறுகளை செய்து மக்களை துன்பத்திற்கு ஆளாக்க வேண்டாம்.
அ.இ.அ.தி.மு.க ஆட்சியில் மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் எந்த திட்டங்களும் கொண்டு வரப்படவில்லை.
மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்றவை வருவதற்கு மூலக்காரணமாக இருந்தது தி.மு.க அரசு தான். ஹைட்ரோ கார்பன் திட்டம் வராமல் தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் சோதனை கிணறுகளை அமைக்க மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தால் வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான என்.தளவாய்சுந்தரம் அறிக்கையில் கூறியுள்ளார்.