மதுரை மருத்துவக் கல்லூரி கூட்ட அரங்கில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் மாவட்ட மாநாடு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாநில துணைத்தலைவரும், வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பின் உயர்மட்ட குழு உறுப்பினருமான தமிழ்ச்செல்வன் தலைமையில் நடைபெற்றது, பணி பாதுகாப்பு சட்டம், வாரிசுப்பணி, காலி பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட ஏழு கோரிக்கைகளை முன்வைத்து மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.

தமிழ்ச்செல்வன் கூறுகையில் “வருவாய்த்துறை, நில அளவைத்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கான பணி பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும், வருவாய்த் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை காலம் முறை ஊதியத்தில் நிரப்பப்பட வேண்டும். பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் பணியாற்றக்கூடிய வருவாய்த் துறையினருக்கு மேம்படுத்தப்பட்ட தனி ஊதியம் வழங்கப்பட வேண்டும்.
அரசு பணிகளில் கருணை அடிப்படையிலான பணியிடங்கள் 25 சதவீத பணியிடங்களாக ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஜூலை 1 ஆம் தேதியை வருவாய்த்துறை தினமாக அறிவிக்க வேண்டும். சமூக நீதி அரசை நடத்துவதாக கூறும் தமிழக முதலமைச்சர் வருவாய் துறை அலுவலர்களை அழைத்துப் பேசி கோரிக்கைகளை தீர்க்க வேண்டும். 40,000 வருவாய்த்துறையினர் ஜூன் 25 ஆம் தேதி ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டோம். தமிழக அரசு வருவாய் துறையினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் விரைவில் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம்” என கூறினார்.