மதுரை உலகத் தமிழ்ச் சங்கமும், சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லூரியும் இணைந்து 174வது ‘தமிழ்க்கூடல் நிகழ்ச்சி உலகத் தமிழ்ச் சங்கப் பெருந்திட்ட வளாகக் கூட்ட அரங்கில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு உலகத் தமிழ்ச் சங்கத்தின் ஆய்வறிஞர் முனைவர் சு.சோமசுந்தரி வரவேற்புரை ஆற்றினார்.
இந்நிகழ்ச்சிக்கு உலகத் தமிழ்ச் சங்கத்தின் இயக்குநர் முனைவர் இ.சா.பர்வீன் சுல்தானா தலைமை தாங்கி கூறுகையில் சாதரணமாகக் கதைகள் ஏன் முக்கியம் என்றால் மனிதமனங்களை மலரவைக்கும் ஆயுதம், நாம் கதைகளால் உருவானவர்கள், நம் பாட்டி கதை சொன்னால் நிலாவை, நட்சத்திரங்களைக் காட்டி கதை சொல்லும்போது சட்டையில் நிலவை, நட்சத்திரங்களை வைத்துக்கொண்டு தூங்குவோம், காலையில் எழுந்து பார்த்தால் எதுவும் சட்டையில் இருக்காது, ஐன்ஸ்டீன் கற்பனைத்திறன் என்பது அறிவுத்திறனை விட மேலானது என்று குறிப்பிட்டார்.
கற்பனைகள்தான் விஞ்ஞானமாக மாறி விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்குக் காரணமாகும் என்றும் அறிவுப்பூர்வமான எழுத்துக்களை வாசியுங்கள் குழந்தைகளே! என்று தனது தலைமையுரையில் குறிப்பிட்டார். இந்நிகழ்ச்சியில் சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லூரியின் முதல்வர்(பொ) மோ.கவிதா முன்னிலை வகித்தார்.

கோயம்புத்தூர் வாழ் எழுத்தாளர் ஆர்னிகாநாசர் ‘நானும் பாவனை விஞ்ஞானக்கதைகளும்’ எனும் தலைப்பில் தமிழ்க்கூடலுரை நிகழ்த்தினார். அவர்தம் உரையில் சிறுகதை என்பது அழிந்து போகும் செய்திகளை நித்தியமாக்கும் கருப்பு மந்திரம், சகமனிதர்களின் வாழ்க்கையை மறைந்திருந்து பார்க்க உதவும் உப்பரிகை ஜன்னல், எழுத்தாளத் தேனீக்களின் ஒரு தேக்கரண்டி கொம்புத்தேன், சமூகத்தின் அன்றாட செயல்பாடுகளைக் காட்டும் மாயக்கண்ணாடி, விரும்பிய ஒரே கதாபாத்திரத்துக்காக வாதாடும் வழக்கறிஞன், கவிதையின் பெரியப்பா மகன், போன்சாய் குற்றால நீர்வீழ்ச்சி, தாய்ப்பால் கலந்த உமிழ்நீருடன் கைக்குழந்தை கொடுக்கும் முத்தம் என்றும் பாவனை விஞ்ஞானக் கதைகள் வெறும் பொழுது போக்குக்காக எழுதப்பட்டவை அல்லஇவிழித்துக் கொண்டே கனவு கண்டு இலக்கை அடையும் சூத்திரம் பாவனை விஞ்ஞானக் கதைகளில் ஒளிந்து இருக்கின்றன.
கடவுளுக்கே புதிய படைப்பியல் ரகசியங்களைக் கற்றுத் தருகின்றன பாவனை விஞ்ஞானக் கதைகள் என்றும் சாத்தியம் இல்லாததை சாத்தியமாக்கும் எழுத்துத் தவம் பாவனை விஞ்ஞானக் கதைகள் என்றும் கற்பனைகள் மனித குலத்தை உச்சம் சேர்க்கும் மின்படிக்கட்டு, தொடர்ந்து பறக்க கற்பனை செய்து இரு இறக்கைகள் பெறுவோம் நண்பர்களே! என்றும் குறிப்பிட்டார்.
இந்நிகழ்ச்சிக்கு உலகத் தமிழ்ச் சங்கத்தின் ஆய்வுவளமையர் முனைவர் ஜ.ஜான்சிராணி அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.இந்நிகழ்ச்சிக்குத் தமிழறிஞர்கள், சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள், அல்அமீன் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், உலகத் தமிழ்ச் சங்க உறுப்பினர்கள், தமிழ் ஆர்வலர்கள், கவிஞர்கள்; என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.