நாகப்படினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த திருப்பூண்டியில் வசித்து வரும் கிராமிய பாடகி சீராவட்டம் முத்துலட்சுமி – பாழடைந்த ஓட்டு வீட்டில் கணவர், மகனுடன் அன்றாடச் செலவுக்கே அல்லல்பட்டு வாழ்ந்து வருகிறார். தினமும் உணவுக்குத் திண்டாடும் சூழல் இருந்தபோதும், அவரின் குரலில் ஒலித்த பாடல் இன்று சமூக வலைதளங்களில் கோடி கணக்கான மக்களை கவர்ந்து வைரலாகியுள்ளது.

அந்தப் பாடல் தான் – “பூங்குயிலே பூங்குயிலே எத்தனை நாளா நான் காத்திருந்தேன்”.
2010 ஆம் ஆண்டு நாகூரில் பதிவு செய்யப்பட்ட “களத்து மேடும் காசி மேடும்” என்ற கேசெட்டில் இடம்பெற்ற 9 பாடல்களில் இதுவும் ஒன்று. 2011 ஆம் ஆண்டு வெளிவந்த இப்பாடல், பிறகு யூடியூப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றது. சமீபத்தில் கேரளாவைச் சேர்ந்த ஒரு சிறுமி மேடையில் பாடியதால் மீண்டும் ட்ரெண்டானது.

இந்தப் பாடலை முத்துலட்சுமி தான் பாடியிருப்பினும், “வேறு சிலர் தான் பாடியவர்கள்” என்று பதாகைகள் அடித்து நிகழ்ச்சிகளில் பாடி சம்பாதித்து வருவதாக அவர் குற்றம்சாட்டுகிறார். “என்னுடைய குரலில் உள்ள பாடலை நாகை மாவட்டத்தைச் சேர்ந்த சிலர் தங்களுடைய பாடலாகச் சொல்லி நிகழ்ச்சிகளில் பாடி வருகிறார்கள். ஆனால் நான் மிகுந்த சிரமத்தோடு வாழ்ந்து வருகிறேன். இந்தப் பாடலை மற்றவர்கள் பாடியதாக யாரும் நம்ப வேண்டாம்” என்று முத்துலட்சுமி தெரிவித்தார்.
மேலும், “என்னுடைய பாடலை வைத்து பிறர் பெயரில் நிகழ்ச்சிகள் நடத்துவதைத் தடுக்க மேடை மெல்லிசை கலைஞர்களும் நாட்டுப்புற கலைஞர்களும் உதவி செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.

பாடலுக்கு சிலர் சொந்தம் கொண்டாடி பொய்யான பரப்புரை மேற்கொள்வதால் திருவிழாக்கள் திருமண நிகழ்ச்சிகள் உள்ளிட்ட விசேஷ நிகழ்ச்சிகளுக்கு தங்களுக்கு அழைப்பு வருவதில்லை என்று வேதனையோடு தெரிவித்துள்ளார். கிராமிய குரலில் பாடப்பட்ட ஒரு சாதாரண பாடல் வைரலாகி மக்களின் உள்ளங்களில் இடம்பிடித்தாலும், அதனைப் பாடிய கலைஞர் இன்னும் வறுமையோடு போராடி வருவது கலை உலகின் சோக நிஜத்தை வெளிப்படுத்துகிறது.