• Wed. Oct 8th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிப்பு..,

BySeenu

Aug 18, 2025

கோவை, சூலூர் பகுதியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ள ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கோவை விமான நிலையம் வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது,

இன்று நான் சூலூரில் பேசுகின்ற கூட்டம், ஏழாவது கூட்டம். 21 ஆம் தேதி திருவான்மையூரில் எட்டாவது கூட்டம் நடைபெறுகிறது. ஒவ்வொரு கூட்டத்திலும் ஒவ்வொரு பொருளை எடுத்து தமிழகத்தில், நானும் என் சகாக்களும் எப்படி பாடுபட்டோம் என்பதை, இளைய தலைமுறையினருக்கு எடுத்துக் கூறுகிறோம்.

இன்றைய நிலையையும் எதிர்காலத்தில் என்ன ? செய்ய வேண்டும் என்பதையும், இளைஞர்களுக்கு எடுத்துக் கூறிக் கொண்டு இருக்கிறோம். நான் நடத்திய ஒவ்வொரு கூட்டத்திலும் நான் எதிர்பாராத அளவுக்கு மிக வெற்றிகரமாக அமைந்தது. ஒவ்வொரு கூட்டத்திலும் பல்லாயிரக் கணக்கான பேர் கைக்காசை செலவு செய்து கொண்டு வந்து சிறப்பு செய்தார்கள்.

அந்த வகையில் தான் இன்று நான் சூலூர் கூட்டத்திற்கு வந்து இருக்கிறேன் என்றும், இங்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்களும், சகாக்களும் கடந்த ஆண்டு நிறைந்த போராட்டத்தை நடத்திய காரணத்தால் இப்பொழுது கோயம்புத்தூரில் இருந்து நாகர்கோவிலுக்கும், பாலக்காட்டில் இருந்து திருச்சிக்கும் செல்லுகின்ற பயணிகள் துரிதத் தொடர் வண்டி கோவையில் சிங்காநல்லூரில் ரயில் நிலையத்தில் நின்று போக வேண்டும் என்று கோரிக்கை நிறைவேற்றப்பட்டு இன்று காலை முதல் தொடர் வண்டிகள் நின்று செல்லும் என்பது, பல்லாயிரக் கணக்கான மக்கள் மாணவர்கள் தொழிலாளர்கள் ஆகியோருக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும் என்ற வகையில், இது குறித்து நாங்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடுகிறோம்.

தமிழகத்தில் வாழ்வாதாரங்களுக்கு இன்னும் ஒரு சில இடங்களில் பாதிப்பு வரும் பட்சத்தில் அதற்கான போராட்டத்தை நாங்கள் நிச்சயம் முன்னிறுத்தி செல்வோம்.

உலகின் பல பகுதிகளில் கடந்த காலங்களில் பல அழிவுகள் ஏற்பட்டு இருக்கின்றன. ஆனால் பாலஸ்தீனம் காசா பகுதியில் ஒரு லட்சத்து 65 ஆயிரம் பாலஸ்தீனியர்கள், இஸ்ரேல் முப்படைகளால் கொல்லப்பட்டு விட்டார்கள்.

அதே போல மேலும் ஒரு லட்சத்து 10 ஆயிரம் பேர் படுகாயம் முற்று இருக்கிறார்கள்.

இஸ்ரேல் நான்கு நாட்களுக்கு முன்னர் பாலஸ்தீனத்தை முழுமையாக கபிலிகரம் செய்து அதை எங்களுடைய ஆட்சிக்குள் கொண்டு வந்து விடுவோம் என சொல்லி விட்டு, சென்று உள்ளது. ஆனால் அங்கு இன்னும் இலட்சக் கணக்கான மக்கள் உணவுப் பொருட்கள் கிடைக்காமல் பசியாய் தவித்துக் கொண்டு இருக்கிறார்கள். அதே போல தாக்குதலில் பலியாகி இனப் படுகொலை நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. இப்படி ஒரு படுகொலை இஸ்ரேல் அரசால் நடத்தப்படுவதற்கு கண்டனம் தெரிவிப்பது மட்டுமல்ல, ஜவஹர்லால் நேரு காலத்தில் பாலஸ்தீனத்தை அங்கீகரித்தது மட்டுமல்லாமல், அதன் பின்னர் வெளியிலேயே அவர்களுக்கு தூதரகம் அமைத்துக் கொடுத்த இந்திய அரசு, இந்தக் கட்டத்தில் இஸ்ரேலுக்கு கடுமையான கண்டனமும் எச்சரிக்கையும் செய்ய வேண்டும்.

பாலஸ்தீன மக்கள் அனாதைகள் அல்ல, ஈழத்தில் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டது போல காசாவில் உள்ள பாலஸ்தீன மக்கள் இனப் படுகொலை செய்யப்படுகிறார்கள்.

அதைக் கண்டித்து தடுத்து நிறுத்த பிரதமர் நரேந்திர மோடி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், அது தற்போது வரை எடுக்கப்படவில்லை.

பாலஸ்தீனத்தை முழுமையாக சுதந்திரம் பெற்ற அரசாக நாங்கள் அங்கீகரிக்கிறோம் என சொல்லி ஐநா சபையின் பொதுக் குழுவில் இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்திக் கொள்கிறேன்.

சி.பி ராதாகிருஷ்ணன் துணை குடியரசு தலைவர் வேட்பாளராவது குறித்த கேள்விக்கு,

எனக்கு நல்ல நண்பர், இதே விமான நிலையத்திற்கு அன்றைய தலைமை அமைச்சர் வாஜ்பாய் வந்த பொழுது பெரும் கூட்டம் அவரை பார்த்து பேச விரும்பியது. ஆனால் லாபியில் இருந்த அடல் ஜி அவர்களிடம், சி.பி ராதாகிருஷ்ணன் சொன்னதை நானும் வலியுறுத்தினேன்,

கோவை மக்கள் உங்களை பார்க்க விரும்புகிறார்கள் என்பதை வலியுறுத்தினோம். தாராளமாக நான் அவர்களை சந்திக்கிறேன் என வந்து சந்தித்தார். 1998 ல் அப்பொழுது நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் போது அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தோடும் பாரதிய ஜனதா கட்சியோடு, மறுமலர்ச்சி தி.மு.க தோழமை கொண்டு இருந்த அந்தக் காலத்தில் இங்கு பெரும் குண்டுவெடிப்பு நடைபெற்றது.

எண்ணற்றவர்கள் மடிந்து படுகாயமுற்று மருத்துவமனையில் இருந்த பொழுது கோவை மாநகரமே ஸ்தம்பித்து அதிர்ந்து போயிருந்தது.

அப்பொழுது எவரும் பிரச்சாரத்திற்கு வராமல் வெருச்சோடி கிடந்த வீதிகளில் நான் விருதுநகரில் இருந்து புறப்பட்டு வந்து சி.பி ராதாகிருஷ்ணனுக்கு பிரச்சாரம் செய்தோம்.

திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் நான் மூன்று நாட்கள் திறந்த வேனில் பிரச்சாரம் செய்தேன், கோட்டைமேடு பதட்டமாக இருக்கிறது என்று DIG என்னை தடுத்தார்.

ஆனால் அதையும் மீறி நான் சி.பி ராதாகிருஷ்ணனுக்காக பிரச்சாரம் செய்தேன்..நல்ல வாக்குகள் வித்தியாசத்தில் சி.பி இராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார்.

தற்போது மகாராஷ்டிரா ஆளுநராக சிறப்பாக பணியாற்றி கொண்டு இருக்கிறார்.

குடியரசு துணைத் தலைவராக பொறுப்பேற்க இருப்பதற்கு எங்களுடைய மகிழ்ச்சிகரமான, வாழ்த்துக்களை மறுமலர்ச்சி திராவிட கழகத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவர் ராஜ்ய சபையின் அவை தலைவராக இருந்து சிறப்பாக நடத்துவதற்கு வாழ்த்து சொல்கிறேன்.

துணை குடியரசு தலைவர் அடுத்த கட்டத்தில் குடியரசு தலைவராக கூட வாய்ப்புகள் உள்ளது.

எனவே கட்சி எல்லைகளைக் கடந்து நம்முடைய தாய் தமிழகத்தினுடைய ஒரு தமிழர், நல்ல பண்பாளர் அனைவரையும் மதிக்க கூடிய சி.பி. இராதாகிருஷ்ணன் அவர்கள் துணை குடியரசு தலைவராக பொறுப்பேற்க இருப்பதை உணர்ந்து நான் வாழ்த்துக்களை, பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

பிகாரில் வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு இருப்பது குறித்த கேள்விக்கு,

பீகாரில் மட்டும் 65 லட்சம் வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார்கள். இது ஒரு அப்பட்டமான ஜனநாயக படுகொலை. தேர்தல் ஆணையம் அப்படி ஒன்றுமே நடக்கவில்லை என சமாதானம் சொல்கிறது.

ஆனால் மிஸ்டர் ராகுல் காந்தி சொல்வது உண்மை அல்ல என்றும் தேர்தல் ஆணையம் சொல்கிறது. ஆனால் ஆவணங்களும் எதிர்க்கட்சித் தலைவர்களுடைய கிடைத்து இருக்கிற ஆவணங்களும் சான்றுகளும் 65 லட்சம் வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார்கள் என சொல்கிறது.

அடியோடு வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கப்பட்டு இருக்கிறது என்றால் சுதந்திர இந்தியாவில் இப்படிப்பட்ட ஒரு மோசடி இதுவரை நடந்தது இல்லை.

அதற்கு தீர்வு காண்பதற்காகவே இண்டி கூட்டணி தலைவர்கள் போராடிக் கொண்டு இருக்கிறார்கள்.

வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்ட பெயர்கள் இடம் பெற வேண்டும் என்பதை ஜனநாயகத்தை விரும்பும் அனைவரின் கோரிக்கையாகும்.

இண்டி கூட்டணி தலைவர்கள் துணை குடியரசு தலைவராக ராதா கிருஷ்ணனை ஆதரிப்பார்களா என்ற கேள்விக்கு,

அவர் அறிவிக்கப்பட்டு இருப்பதற்கு நான் வாழ்த்து கூறினேன்., இண்டி கூட்டணி கலந்து பேசி யாரை நிறுத்த போகிறார்கள், என்பதை இப்பொழுது யூகமாக நான் கூற முடியாது. அவர் எனக்கு நண்பர் என்ற முறையில் கட்சியை கடந்து தமிழராக உள்ள நான் அவருக்கு வாழ்த்து கூறினேன்.

திராவிட முன்னேற்றக் கழகமும் தோழமைக் கட்சிகளும் ஆலோசித்து முதல்வர் மூலமாக அறிவிக்கும் அறிவிப்பின் படி மறுமலர்ச்சி தி.மு.க நடந்து கொள்ளும் என்று கூறினார்.

தூய்மை பணியாளர்கள் மதுரையில் போராட்டத்தை தொடங்கி இருக்கிறார்கள் என்ற கேள்விக்கு,

ஆதித்தமிழர் பேரவை கூட இது குறித்து அறிக்கை கொடுத்து இருக்கிறது, இதுகுறித்து அமைச்சரவையும் முதலமைச்சரும் நீண்ட நேரம் விவரித்து ஆலோசனை செய்து இருக்கிறார்கள். இப்பொழுது இந்த கோரிக்கைகளும் வந்து இருப்பதை பொறுத்து அரசு என்ன ? முடிவு எடுக்கப் போகிறது என்பதை பொறுத்து இருந்து பார்க்க வேண்டும்.

அவர்கள் அதே பணியை திரும்பத், திரும்ப செய்ய வேண்டியது இல்லை என்பதில் எனக்கு முழு உடன்பாடு கொண்டு.

தந்தை செய்கிற வேலையை தான் பிள்ளை செய்ய வேண்டும் என்பது சமூக நீதிக்கு விரோதமானது என்று கூறினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் மதுரை மாநாடு குறித்த கேள்விக்கு,

ஒவ்வொரு அரசியல் கட்சியும் மாநாடு போடுகிறது அவர்களும் மாநாடு போடுகிறார்கள், நான் லட்சோப லட்ச அலை கடலென திரண்டு வந்த மாநாடுகளை எல்லாம் 30 வருடங்களுக்கு முன்னரே பார்த்து இருக்கிறேன். யாரும், யாரையும் பார்த்து இங்கு பயப்படவில்லை.

ஒரு சமூகம் தான் தேர்தலை நிரூபிக்கும் என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல. அந்த யூகங்கள் எல்லாம் தற்போது மாறிவிட்டது என்று கூறினார்.