கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு கப்பல் சேவையை பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைத்தார். அப்போது போதிய பயணிகள் வராத காரணத்தால் செரியா பாணி என்ற கப்பல் போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் 22 ஆம் தேதி சுபம் நிறுவனத்தின் சார்பாக மீண்டும் இயக்கப்பட்ட சிவகங்கை கப்பல் போக்குவரத்து சேவை வாரத்தில் 6 நாட்களும் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் சிவகங்கை கப்பல் சேவை தொடங்கி ஓராண்டு நிறைவுபெற்ற நிலையில் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா இன்று நடைபெற்றது. இன்று அதிகாலை துறைமுகம் வந்த பயணிகளுக்கு மணிமாலை அணிவித்து பரிசுகள் வழங்கி சுபம் நிறுவன உரிமையாளர் சுந்தர்ராஜன் வரவேற்றார். தொடர்ந்து மும்மத பிரார்த்தனை கப்பலுக்குள் நடைபெற்றதை அடுத்து குருமார்கள் கொடியசைத்து கப்பல் போக்குவரத்து சேவையை தொடங்கி வைத்தனர்.

ஒரு வருடத்தில் 20 ஆயிரத்து 98 பேர் இலங்கையில் இருந்து இந்தியாவிற்கும், இந்தியாவில் இருந்து இலங்கைக்கும் பயணம் செய்துள்ளனர். கப்பலில் வரிவிலக்குடன் உயர்தர மதுபானங்கள் விற்பனை, துரித உணவு மற்றும் சிற்றுண்டிகள் விற்பனை, இலவச வைபை என பயணிகளை கவர சிறப்பு ஏற்பாடுகளை கப்பல் நிறுவனத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

வெற்றிகரமாக இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைப்பது மகிழ்ச்சியளிப்பதாக கூறியுள்ள கப்பல் நிறுவன உரிமையாளர் சுந்தர்ராஜன், இரண்டாம் ஆண்டு துவக்கவிழா சலுகையாக பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு மூன்று பகல், இரண்டு இரவு இலங்கையில் தங்குவதற்கு கப்பல் டிக்கெட் கட்டணத்தோடு 9999 ரூபாய் என சிறப்பு சலுகை என்றும், மாணவர்களை ஒருங்கிணைத்து அழைத்து வரும் இரண்டு ஆசிரியர்களுக்கு இலவச டிக்கெட் வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார்.