ஆழ்கடல் மீன் பிடிப்பை ஊக்கப்படுத்தும் விதமாக, நீலப்புரட்சித் திட்டத்தின் கீழ் மத்திய, மாநில அரசுகள் தமிழக மீனவர்களுக்கு 84 லட்சம் ரூபாய் மதிப்பில் விசைப்படகு கட்டுவதற்கு மானியத்துடன் கூடிய கடன் வழங்கியது.

2021 ம் ஆண்டு இத்திட்டத்தில் தேர்வான நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையை சேர்ந்த மீனவர் சுப்பிரமணியனுக்கு 2023 ஆம் ஆண்டு கன்னியாகுமரியில் உள்ள எஸ் எம் இன்ஜினியரிங் படகு கட்டுமான நிறுவனம் 1, கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான விசைப்படகை கட்டி கொடுத்தது.
இந்நிலையில் கனம் குறைந்த பழைய இரும்பு பட்டைகள் மற்றும் தரமற்ற கம்பிகளால் கட்டப்பட்ட விசைப்படகு, மீன் பிடிக்கச் சென்ற ஒரே மாதத்திற்குள் ஓட்டை விழும் நிலைக்கு ஆளானதாக கூறப்படுகிறது.
இதனால் கடலுக்குச் சென்ற மீனவர்கள் அந்தப் படகினை பயன்படுத்தி மீன் பிடிக்க முடியாது என கூறி சம்பந்தப்பட்ட படகு கட்டுமான நிறுவனம் மற்றும் தமிழக மீன்வளத்துறை அதிகாரிகளிடம் படகை பழுது பார்த்து தர வேண்டுமென்றும் அல்லது படகுக்கான நஷ்ட ஈடு பெற்றுத்தர வேண்டுமென கடந்த இரண்டு ஆண்டுகளாக போராடி வந்துள்ளனர்.

இந்நிலையில் இதற்கு எந்தவித நடவடிக்கையும் இல்லாத காரணத்தால், பாதிக்கப்பட்ட அக்கரைப்பேட்டையை சேர்ந்த படகு உரிமையாளர் மற்றும் மீன்பிடி தொழிலாளர்கள் அவர்களின் குடும்பத்துடன் இன்று நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், உயிருக்கு உத்திரவாதமின்றி தரமற்ற முறையில் படகு கட்டிக் கொடுத்த நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வங்கி கடனால் பாதிக்கப்பட்டுள்ள தங்களுக்கு நஷ்ட ஈடு பெற்று தராத தமிழக மின்வளத்துறையை கண்டித்தும் மீனவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
படகை நம்பியிருந்த 15 மீனவ குடும்பத்தினரின் வாழ்வாதாரம் தற்போது கேள்விக்குறியாகி, உள்ளதாக வேதனை தெரிவித்த மீன்பிடி தொழிலாளர்கள், படகை கட்டுமான நிறுவனம் பழுது நீக்கி நஷ்ட ஈடு வழங்கிட நடவடிக்கை வேண்டும் என அவர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.