கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்தில் களஞ்சியம் பெண் விவசாயிகள் சங்கத்தின் 31ஆவது மாநில 2 நாள் மாநாடு செவ்வாய்கிழமை தொடங்கியது.
பாரம்பரிய விவசாயத்துக்குத் திரும்புவோம் என்ற தலைப்பில் தென் மாவட்ட அளவிலான பெண் விவசாயிகள் இம்மாநாட்டில் பங்கேற்றனர்.

மாநாட்டுக்கு களஞ்சியம் பெண் விவசாயிகள் சங்க மாநிலத் தலைவி பொன்னுத்தாய் தலைமை வகித்தார். நாகர்கோவில் சங்க நிர்வாகி லிட்வின் முன்னிலை வகித்தார். உஷா வரவேற்றார். நாகர்கோவில் விவசாயிகள் சங்கத் தலைவர் தாணுபிள்ளை, இயற்கை ஆர்வலர் சின்னமுட்டம் ஜெயசிறில், கன்ஸ்யூமர் வாய்ஸ் ஆப் கன்னியாகுமரி செயலர் மெல்கியாஸ், விவேகானந்த கேந்திர நார்டெப் இயக்குநர் ராமகிருஷ்ணன் ஆகியோர் உரையாற்றினர்.

இம்மாநாட்டில் இயற்கை ஆர்வலர் சின்னமுட்டம் ஜெயசிறில் பேசியதாவது: அனைவரும் நோய் இல்லாமல் வாழ வேண்டுமென்றால் பாரம்பரிய இயற்கை விவசாயத்துக்கு திரும்ப வேண்டும். பெண் விவசாயிகள் இதனை முன்னெடுப்பது சிறப்பானதாகும். தற்போதுள்ள வாழ்க்கை முறையில் சிறுதானிய உணவுகளை நாம் அதிகமாக பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் பல்வேறு நோய்களுக்கும் நாம் விடை கொடுக்கலாம்.

அதுபோன்று நாம் வீட்டில் வளர்க்கும் மாடுகளுக்கு சிறுதானிய தவிடுகளை உணவாகக் கொடுத்தால் ஊட்டச்சத்து மிகுந்த பால் நமக்கு கிடைக்கும். இதன் மூலம் மனிதர்களுக்கு வரும் முக்கிய நோயான அல்சர் குணமாகும். குறிப்பாக நம் முன்னோர்கள் பயன்படுத்திய உணவு முறைக்குத் திரும்ப வேண்டும். விவசாயத்தை வாழ வைப்பதிலும் சிறுதானிய உற்பத்தி முக்கிய பங்கு வகிக்கிறது என்றார் அவர்.

பல்வேறு வகையான சிறு தானியங்கள் மரவள்ளி கிழங்கு, கொய்யாப்பழம் இவை தனித்தனியாக காட்சி படுத்தப்பட்டிருந்தது.
இன்றும், நாளையும் இந்த நிகழ்வு. கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரா வளாகத்தில் நடைபெறுகிறது.





