நாகை கடைசல்காரத் தெருவைச் சேர்ந்தவர் சபிதா பேகம், இவருக்கும் நாகை அருகே பொராவச்சேரியை சேர்ந்த உமர்பாரூக் என்பவருக்கும் திருமணம் நடந்தது. திருமணத்தின் போது 40 பவுண் நகை , 60000 ஆயிரம் சீர்வரிசையாக கொடுத்துள்ளனர். இந்நிலையில் உமர்பாரூக்கின் வீட்டின் மேல்மாடி பகுதியை 12 லட்சம் மதிப்பில் கட்டித் தரும்படி சபிதா பேகம் குடும்பத்தினரிடம் கேட்டதாக தெரிகிறது. இதற்கு சபீதா பேகம் குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இதனால் உமர்பாரூக்கிற்கும், சபிதாபேகத்திற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் சபீதா பேகம் தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். இந்நிலையில் கணவர் உமர் பாரூக் வெளிநாடு சென்று விட்டார். அப்போது உமர் பாரூக்க தனது நண்பர் பொரவாச்சேரியை சேர்ந்த முகமது ரியாஸ் என்பவருடன் சேர்ந்து போலியான முகநூல் கணக்கை தொடங்கி மனைவி சபிதா பேகத்தின் புகைப்படத்தை பதிவு செய்து அதில் தவறான வார்த்தைகளை எழுதி அவமானம் ஏற்படுத்தும் வகையில் முகநூலில் வெளியிட்டதாக தெரிகிறது.
மேலும் மனைவி சபீதா பேகத்தின் நிர்வாண புகைப்படங்களையும் சமூக வலைத்தளத்தில் பரப்பியதாக கூறப்படுகிறது. இதுக்குறித்து மன உளைச்சல் அடைந்த சபிதா பேகம் நாகை மாவட்ட சைபர் க்ரைம் பிரிவில் புகார் செய்தார். புகாரின் பேரில் கணவர் உமர்பாரூக் , அவரின் நண்பர் முகமது ரியாஸ் இருவர்மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் உமர்பாரூக் வெளிநாட்டிற்கு தப்பி சென்றுவிட்டார். இந்த நிலையில் 4 வருடம் சவுதி அரேபியாவில் இருந்துவிட்டு சொந்த ஊருக்கு விமானத்தில் வந்த உமர் பாரூக்கை மும்பை விமான நிலையத்தில் மும்பை போலிசார் கைது செய்து நாகை சைபர் க்ரைம் போலிசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன் பேரில் மும்பை சென்று உமர் பாரூக்கை நாகை அழைத்து வந்து நாகை சைபர் க்ரைம் போலிசார் நாகை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். நாகையில் மனைவியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு கைதுக்கு பயந்து வெளிநாட்டில் இருந்த கணவனை 4 வருடங்களுக்கு பிறகு சைபர் க்ரைம் போலிசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.