சிவபெருமானின் நெஞ்சில் உறைபவர்களில் நால்வரில் ஒருவரான மாணிக்கவாசகருக்கு ஆடி மாதம் மக நட்சத்திரத்தின் போது குருபூஜை வழிபாடு நடைபெறுகிறது. இதன்படி பழனியை அடுத்த பாலாறு அணை அருள்மிகு அமுதீஸ்வரர் திருக்கோயிலில் மாணிக்கவாசகர் குருபூஜை நடைபெற்றது.

அதிகாலை முதலே சிவபெருமானுக்கும் நால்வரில் ஒருவரான மாணிக்கவாசகருக்கும் பால், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. நிலாவை முன்னிட்டு கோவை அரன் பணி அறக்கட்டளை சார்பில் பவானி தியாகராஜன் ஐயாவின் திருவாசகம் முற்றோதல் நடைபெற்றது. நூற்றுக்கணக்கான பெண்களும் ஆண்களும், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிவபெருமானின் வரலாற்றை திருவாசகம் மூலம் பாடலாக பாடினர்.

ஒவ்வொரு பதிகத்தின் போதும் சிவனின் சிறப்புகள் பற்றி தியாகராஜன் ஐயா எடுத்துரைத்தார். உச்சிக் காலத்தின் போது சுவாமிக்கு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. தீபாராதனையைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கோயில் வளாகத்தில் திருவாசக புத்தகங்கள், ருத்ராட்சங்கள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டது.