மும்பையில் இருந்து 148 பயணிகள்,6 விமான ஊழியர்கள், 154 பேருடன் நள்ளிரவில், சென்னைக்கு புறப்பட்ட ஏர் இந்தியா பயணிகள் விமானம், நடு வானில் இயந்திர கோளாறு ஏற்பட்டு, மீண்டும் அவசரமாக, மும்பைக்கு திரும்பி சென்று தரை இறங்கியது.
அதன்பின்பு பயணிகள், வேறு விமானத்திற்கு மாற்றப்பட்டு, விமானம் சுமார் 5 மணி நேரம் தாமதமாக, இன்று காலை, சென்னை வந்து சேர்ந்தது.
விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறை விமானி, தகுந்த நேரத்தில் கண்டுபிடித்து, எடுத்த உடனடி நடவடிக்கை காரணமாக, ஆபத்து தவிர்க்கப்பட்டு, 154 பேர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.

மும்பையில் இருந்து சென்னை வரும் ஏர் இந்தியா பயணிகள் விமானம் நேற்று இரவு 11 மணிக்கு, 148 பயணிகள்,6 விமான ஊழியர்கள், 154 பேருடன் சென்னைக்கு புறப்பட தயாரானது. ஆனால் அந்த விமானம் தாமதமாக, நள்ளிரவு 12 மணிக்கு, சென்னைக்கு புறப்பட்டது. அந்த விமானம், நடு வானில் சென்னையை நோக்கி பறந்து கொண்டு இருந்தது.
அப்போது விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டதை, விமானி கண்டுபிடித்தார். இதை அடுத்து விமானி மும்பை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்டு விட்டு, மீண்டும் விமானத்தை திருப்பி கொண்டு சென்று, மும்பை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கினார்.
அதன்பின்பு விமானப் பொறியாளர்கள் குழுவினர், விமானத்துக்குள் ஏறி, விமானத்தின் இயந்திரங்களை சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் இயந்திர கோளாறுகளை உடனடியாக சரி செய்ய முடியவில்லை. இதை அடுத்து பயணிகள் அனைவரும் விமானத்திலிருந்து கீழே இறக்கப்பட்டு ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்டனர்.
அதன் பின்பு ஏர் இந்தியா விமான நிறுவனம் மாற்று விமானம் ஒன்று ஏற்பாடு செய்து, பயணிகள் அனைவரும் மாற்றி விமானத்தில் ஏற்றப்பட்டனர்.அதன் பின்பு அந்த ஏர் இந்தியா பயணிகள் விமானம், இன்று அதிகாலை 4.35 மணிக்கு, மும்பையிலிருந்து புறப்பட்டு, இன்று காலை 6.05 மணிக்கு, சென்னை உள்நாட்டு விமான நிலையம் வந்து சேர்ந்தது.
மும்பையில் இருந்து சென்னை வரவேண்டிய ஏர் இந்தியா பயணிகள் விமானம், நடுவானில் திடீர் இயந்திர கோளாறு காரணமாக, மும்பைக்கே திரும்பி சென்று, அதன் பின்பு மாற்று விமானத்தில் பயணிகள் ஏற்றப்பட்டு, மீண்டும் மும்பையில் இருந்து சென்னைக்கு புறப்பட்டு வந்ததன் காரணமாக, அந்த விமானம் சுமார் 5 மணி நேரம் தாமதமாக, சென்னைக்கு வந்து சேர்ந்தது. இதனால் விமானத்தில் வந்த 148 பயணிகள் பெரும் அவதி அடைந்தனர்.
அதோடு விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு விமானி தகுந்த நேரத்தில் கண்டுபிடித்து எடுத்த உடனடி நடவடிக்கை காரணமாக, விமானம் ஆபத்திலிருந்து தப்பியதோடு, விமானத்திலிருந்து 148 பயணிகள், 6 விமான ஊழியர்கள் உட்பட, 154 நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் இன்று அதிகாலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.