திருப்பரங்குன்றம் முருகன் கோவிலின் மகா கும்பாபிஷேகம் ஜுலை 14-ந் தேதி நடைபெற உள்ளது. கோபுர தரிசனத்திற்கு உள்ளூர் பொதுவிடுமுறை வருமா? என பொதுமக்கள், பக்தர்களிடையே எதிர்பார்ப்பு நிலவுகிறது.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வருகின்ற ஜூலை மாதம் 14-ந் தேதி அன்று மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. இந்த நாளில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கோபுர தரிசனம் செய்வதற்கு ஏற்ப உள்ளூர் பொதுவிடுமுறை விடப்படுமா? என்று பக்தர்களிடையே எதிர்பார்ப்பு நிலவுகிறது. காணக்கிடாத திருமணத்தலம்
“குன்று இருக்கும் இடம் எல்லாம் குமரன் குடிகொண்டு இருப்பார்” என்போம். ஆனால் குன்றையே (மலையை) குடைந்து அமையபெற்ற புண்ணிய தலமாக திருப்பரங்குன்றம் அமைந்து உள்ளது. முருகப்பெருமானுக்கு அறுபடை வீடுகள் இருந்த போதிலும் எந்த தலத்திலும் காணக் கிடைக்காத ஒன்றாக முருகப்பெருமான் அமர்ந்த நிலையில் சாந்தமாக தெய்வானை அம்பாளுடன் திருமணக்கோலத்தில் அருள்பாலிக் கூடிய ஒரே தலமாக திருப்பரங்குன்றம் அமைந்து உள்ளது. இந்த கோவிலின் கருவறையில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்பாள் திருமணக்கோலம், துர்க்கை அம்பாள், கற்பக விநாயகர், சத்யகிரிஸ்வரர் (சிவபெருமான்), பவளக்கனிவாய் பெருமாள் என்று தனித்தனியாக 5 சன்னதிகள் அமைய பெற்றுள்ளது. சிவபெருமான் சன்னதிக்கு எதிரே நந்தி வாகனம் அமைந்து இருக்கும். ஆனால் இங்கு சிவபெருமானுக்கு நேர் எதிராக பவளக்கனிவாய் பெருமாள் சன்னதி அமைந்து இருக்கிறது. இது இந்தக் கோவிலின் தனிச்சிறப்பாக போற்றப்படுகிறது. முருகப்பெருமானின் வாகனமான மயிலும், சிவப் பெருமானின் வாகனமான நந்தியும், கற்பக விநாயகரின் வாகனமான மூஞ்சுறும் ஒரே சேராக கோவிலுக்குள் கம்பத்தடி மண்டபத்தில் அமையபெற்று இருப்பதையும் தனிச்சிறப்பாக. கருதுகிறார்கள்.
சைவ, வைணம் முருகப்பெருமானின் முதற்படை வீடு என்று போற்றக்கூடிய இந்த திருத்தலத்தில் முருகப்பெருமானுக்கு 12 மாதமும் திருவிழாக்கள் நடைபெற்று வந்த போதிலும், 15 நாளைக்கு ஒரு முறை சிவப்பெருமானுக்கு உகந்த பிரதோஷம் வழிபாடும், பவளக்கனிவாய் பெருமாள் வீற்றிருப்பதால் ஆண்டுக்கு ஒரு முறை பெருமாளுக்கு உகந்த சொர்க்க வாசல் திறப்பும் நடந்து வருகிறது. மதுரையில் முத்திரை பதிக்கும் சித்திரை திருவிழாவில் மீனாட்சி அம்மனுக்கு சுந்தரேஸ்வரரை தாரை வார்த்து கொடுப்பதே இந்தபவளக்கனிவாய் பெருமாள் தான். அருள் செறிந்த திருப்பரங்குன்றத்தின் மலையானது சிவலிங்க வடிவத்தில் அமைந்து உள்ளது. ஆகவே சிவபெருமானே மலையாக காட்சி தருகிறார் என்று பக்தர்களிடையே அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது. ஆகவே மாதம் தோறும் பவுர்ணமி கிரிவலமானது வளம் பெற்று வருகிறது. காசிவிசுவநாதர், சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்கா உள்ளதால் மத நல்லிணக்க மலையாகவும் திகழ்கிறது. இதே மலையில் தெய்வீக புலவர் நக்கீரருக்காக முருகப்பெருமான் தன் திருக்கரத்தில் உள்ள வேல் கொண்டு உருவாக்கிய காசிக்கு நிகரான கங்கை தீர்த்த (சுனை) குளம் அமைந்து உள்ளது மீனாட்சி அம்மன் கோவிலுடன். இப்படி எத்தனையோ பல்வேறு சிறப்புக்கள் கொண்டதிருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலானது கடந்த 1983 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கு முன்பு வரை மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலுடன் துணையாக இருந்து வந்தது. 1983-ல் டிசம்பர் மாதத்தில் இருந்து தனி செயல் அலுவலர் கட்டுப்பாட்டில் செயல்பட தொடங்கியது. தற்போது துணை கமிஷனர் அந்தஸ்தில் முதுநிலை கோவிலாக செயல்பட்டு வருகிறது.
ஜுலை 14-ந் தேதி கும்பாபிஷேகம்
இந்த நிலையில் இந்த கோவிலில் தற்போது 2 கோடியே 44 லட்சத்தில் 20 திருப்பணிகள் செய்யப்பட்டு வருகிறது. வருகின்ற ஜுலை மாதம் 14-ந் தேதி அன்று அதிகாலை 5.25 மணி முதல் காலை 6.10 மணிக்கு ஏழு நிலை கொண்ட 125 அடி உயரமுள்ள ராஜகோபுரத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு மகாகும்பாபிஷேகம் நடக்கிறது. இதில் மதுரை மாவட்டம் மட்டுமல்லாது தமிழகத்தில் உள்ள பல்வேறு முக்கிய நகரங்களில் இருந்து தங்கள் குடும்பத்துடன் பலஆயிரக்கணக்கான பக்தர்கள் வரக்கூடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
உள்ளூர் பொது விடுமுறை வருமா?
ஆகவே மதுரையில் சித்திரை திருவிழாவின் போது பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்காக உள்ளூர் விடுமுறை விடப்பட்டது போல திருப்பரங்குன்றம் முருகன் கோவிலின் மகா கும்பாபிஷேகம் நடைபெறக்கூடிய ஜுலை மாதம் 14-ந் தேதி அன்று கோவிலுக்கு சென்று கோபுர தரிசனம் செய்திட மதுரை மாவட்டம் முழுவதுமாக பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்காக பள்ளி, கல்லூரி, அனைத்து அரசு அலுவலங்கள், தனியார் தொழில் கூடங்களுக்குமாக உள்ளூர் பொது விடுமுறை விடப்பட வேண்டும். என்பது முருக பக்தர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
மகா கும்பாபிஷேகம் நடந்த ஆண்டுகள்
கடந்த 83 ஆண்டு நவம்பர் மாதம் முன்பு வரை மதுரைமீனாட்சி அம்மன் கோவிலுடன் துணை கோவிலாக திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் முதல் முறையாக கடந்த 88 ஆம் ஆண்டில் பிப்ரவரி மாதம் 7-ந் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. இதனையடுத்து12 ஆண்டுக்கு ஒரு முறை என்ற ஆகம விதிப்படி கடந்த 2000 ஆண்டில் ஜுன் மாதம் 11-ந் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இந்த நிலையில் ஆகம விதிக்கு அப்பாற்பட்டு ஒரு ஆண்டுக்கு முன்னதாகவே கடந்த 2011-ல் ஜுன் மாதம் 6-ந்தேதி கும்பாபிஷேகம் நடந்தது. இந்த நிலையில் தற்போது 13 ஆண்டுகளுக்கு பிறகு 14 – 7 – 2025-ல் மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.