• Tue. Nov 4th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

காவேரி கூக்குரல் கருத்தரங்கம் மட்டற்ற மகிழ்ச்சியை தருகிறது – அமைச்சர் மனோ தங்கராஜ் பேச்சு…

ByKalamegam Viswanathan

Jun 23, 2025

“காவேரி கூக்குரல் கருத்தரங்கில் பெருமளவில் திரண்டு இருக்கும் விவசாயிகளுடன் கலந்து கொள்வது மட்டற்ற மகிழ்ச்சியை தருகிறது. இது போன்ற விவசாய கருத்தரங்குகள் காலத்தின் தேவை” என அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.

ஈஷா காவேரி கூக்குரல் சார்பில் “மகத்தான வருமானம் தரும் மாற்று விவசாய கருத்தரங்கம்” கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரத்தில் உள்ள சாரதா கிருஷ்ணா ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் இன்று (22.06.2025) நடைபெற்றது.

இதில் காவேரி கூக்கூரல் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் திட்ட விளக்கவுரையாற்றி பேசுகையில்.., “ஈஷா காவேரி கூக்குரலின் மரம் சார்ந்த விவசாய கருத்தரங்குகள், தேசிய வேளாண் ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானிகளின் அறிவியலையும், முன்னோடி விவசாயிகளின் அனுபவ அறிவையும் இணைத்து எளிய விவசாயிகளுக்கு தரும் வகையில் நடத்தப்படுகின்றன. இதற்கு விவசாயிகள் மத்தியில் பெருமளவில் ஆதரவு கிடைத்து வருகிறது.

மரம் சார்ந்த விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில், மர விற்பனையை ஒழுங்குபடுத்தி குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய ‘டிம்பர் வளர்ச்சி வாரியம்’, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ‘மிளகு கொடி விநியோகம்’ மற்றும் தடையில்லா ‘சந்தன மர விற்பனை’ ஆகிய 3 கோரிக்கைகளை அமைச்சர் மூலம் அரசுக்கு முன்வைக்கிறோம்.” எனக் கூறினார்.

இதனைத் தொடர்ந்து பேசிய பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், “இன்றைக்கு நிலைத்த நீடித்த எதிர்காலத்தை உருவாக்க வேண்டிய தேவை இருக்கிறது. அதனை விவசாயத்தில் இருந்துதான் துவங்க வேண்டும். அந்த வகையில் பல்வேறு வல்லுனர்கள், வெற்றி விவசாயிகள் கலந்து கொள்ளும் இக்கருத்தரங்கு காலத்தின் தேவை என்றே கூற வேண்டும். இதில் பெருமளவில் திரண்டு இருக்கும் விவசாயிகளுடன் கலந்து கொள்வது மட்டற்ற மகிழ்ச்சியை தருகிறது.

சமூக காடுகள் பெருமளவில் அழிந்து வருவது, நெகிழி குப்பைகளை அலட்சியமாக ஆறுகளில் கொட்டுவது, நிலத்தடி நீர் மட்டம் குறைவது ஆகியன கடந்த 25 ஆண்டுகளில் ஏற்பட்டு இருக்கின்றன. இவை நம் முன் இருக்கும் சவால்கள். இவற்றை சமாளிக்க நாம் இயற்கை சார்ந்து செல்ல வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்த 35-க்கும் மேற்பட்ட வாழை இனங்கள் அழிந்து வந்தன. நான் அமைச்சராக பொறுப்பேற்ற உடன் துறை அதிகாரிகளுக்கு அவற்றை மீட்க வேண்டுமென கூறினேன். தற்போது அரசு பழத் தோட்டத்தில் 35 ரக வாழை இனங்கள் நிற்கின்றன. காவேரி கூக்குரல் சார்பில் முன்வைக்கப்பட்டு இருக்கும் 3 கோரிக்கைகளை துறை சார்ந்த அமைச்சரிடம் எடுத்துச் செல்ல உறுதுணையாக இருப்பேன்” என்றார்.

தென்னைக்குள் பல அடுக்கு, பல பயிர் விவசாயம் மூலம் சாதனை படைத்த முன்னோடி விவசாயி வள்ளுவன் பேசுகையில், “விளைச்சல் குறைவால் தென்னை விவசாயிகள் கவலைப்படுகிறோம். அதற்கு பருவநிலை மாற்றம் முக்கிய காரணமாக உள்ளது. வறட்சி, மழைப்பொழிவு என மாறி மாறி வரும் போது, தென்னை போன்ற ஒரு பயிர் சாகுபடி, விவசாயிக்கு நஷ்டமாக உள்ளது. ஈஷா மண் காப்போம் இயக்கம் பலபயிர் சாகுபடியால் தென்னைக்கு பாதிப்பில்லை என்பதை புரிய வைத்தனர். தற்போது, தென்னைக்குள் ஊடுபயிராக ஜாதிக்காய், வாழை, மரப்பயிர்கள், பாக்கு போன்றவற்றை சாகுபடி செய்து வருமானம் பெற முடிகிறது. இதனால் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வருமானம் எளிதாகக் கிடைக்கிறது” என்றார்.

முன்னோடி ஜாதிக்காய் விவசாயி சொப்னா சிபி கள்ளிங்கள் பேசுகையில், “தென்னை, பாக்கு, ஜாதிக்காய், மிளகு, வாழை மற்றும் காய்கள், பழங்கள் என 25 ஏக்கரில் இயற்கை விவசாயம் செய்கிறோம். ஜாதிக்காய் விளைச்சலுக்கு தாமதமானாலும், அது தரும் வருமானம் அதிகமானதாக இருக்கும். மலைப்பிரதேசம், சமவெளிகளிலும் நன்றாக விளையக் கூடியது ஜாதிக்காய். விவசாயிகள் நலனுக்காக ஈஷா செயல்படுகிறது. விவசாய நிலங்களில் மரக்கன்றுகள் நட்டு பசுமையை ஏற்படுத்தும் ஈஷாவுக்கு பாராட்டுகள்.” என்றார்.

சமவெளியில் ஜாதிக்காய் சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து விஞ்ஞானி ஆர்த்தி பேசுகையில், “ஜாதிக்காய் பசுமையான பகுதிகளில் வளரக் கூடியது. அதற்கான தேவையான சூழலை உருவாக்கி விட்டால் எங்கும் அதனை வளர்க்க முடியும். நல்ல விளைச்சல் தரக்கூடிய பல ரகங்கள் தற்போது கிடைக்கின்றன.” என்றார்.

தொடர்ந்து, ஜாதிக்காய் சாகுபடி குறித்து இந்திய நறுமணப் பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனத்தை சேர்ந்த மூத்த விஞ்ஞானிகள் கண்டியண்ணன், முகமது பைசல் மீரான் மற்றும் அவகோடா சாகுபடி குறித்து இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானி செந்தில்குமார், பூச்சிகள் குறித்து பூச்சி செல்வம், தேனீ வளர்ப்பு மூலமாக வருமானம் அதிகரிப்பு குறித்து மதுரையைச் சேர்ந்த ஜோஸ்பின் மேரி ஆகியோர் விளக்கிப் பேசினர்.