• Sat. Oct 4th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

வருமானம் தரும் மாற்று விவசாய கருத்தரங்கம்.,

ByKalamegam Viswanathan

Jun 19, 2025

ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் “மகத்தான வருமானம் தரும் மாற்று விவசாயம்” எனும் தலைப்பில் மாபெரும் கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இக்கருத்தரங்கு கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரத்தில் உள்ள சாரதா கிருஷ்ணா ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் வரும் ஜூன் 22-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதுதொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை பிரஸ் கிளப்பில் இன்று (19/06/2025) நடைபெற்றது. இதில், காவேரிக் கூக்குரல் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் பேசியதாவது:

காவேரி கூக்குரல் இயக்கம், அழிந்து வரும் காவேரி நதிக்கு புத்துயிரூட்டும் நோக்கத்தில் சத்குருவால் துவங்கப்பட்டது. இதன் மூலம் காவேரி வடிநிலப் பகுதிகளில் 242 கோடி மரங்கள் நட திட்டமிட்டு, அதனை செயல்படுத்தும் வகையில் இயங்கி வருகிறோம். மரங்கள் மண்ணின் கீழ்நிலை நீர்த்தொட்டி என்று நம்மாழ்வார் கூறி இருக்கிறார். ஒரு நதி ஆண்டு முழுவதும் சீராக பாய, பொழியும் மழை நீரை மண்ணுக்குள் சேமிப்பதே நிலைத்த நீடித்த மற்றும் இயற்கையான தீர்வாகும்.

மரங்களின் வேர்களும், கீழே விழும் இலை தழைகள் மண்ணின் வளத்தையும், மண்ணின் நீர்பிடிக்கும் திறனையும் மேம்படுத்துகிறது. இதன் மூலம் மழைநீர் மண்ணில் சேகரிக்கப்படுகிறது. ஒரு நதியின் வடிநிலப்பகுதிகளில் மண்வளத்தை முறையாக பராமரித்தால், அது அந்த நதிக்கு புத்துயிர் அளிக்கும்.

அந்த வகையில், இவ்வியக்கம் மூலம் மரம் சார்ந்த விவசாயத்தை விவசாயிகள் மத்தியில் கொண்டு சேர்த்து வருகிறது. விவசாயிகளின் பொருளாதாரம், சுற்றுச்சூழல் மேம்பாடு, ஆறுகளை உயிர்ப்பித்தல் என்னும் 3 நோக்கங்களை பிரதானமாகக் கொண்டு இவ்வியக்கம் இயங்கி வருகிறது.

சத்குரு அவர்கள் பொருளாதாரத்தையும், சுற்றுச்சூழலையும் இணைக்கும் விதமாக இந்த இயக்கத்தை வடிவமைத்துள்ளார். இவ்வியக்கம் மூலம் இதுவரை கிட்டத்தட்ட 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் மரம் சார்ந்த விவசாயத்துக்கு மாறியுள்ளனர். இவ்வியக்கம் மூலம் தமிழ்நாட்டில் மட்டும் கடந்தாண்டு 1.21 கோடி மரங்கள் விவசாய நிலங்களில் நடப்பட்டன. அதே இலக்கை இந்தாண்டும் அடைய வேண்டும் என செயல்பட்டு வருகிறோம்.

அதன்படி விவசாயிகளுக்கு மரம் சார்ந்த விவசாயம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக தமிழ்நாடு முழுக்க தொடர்ந்து மாபெரும் கருத்தரங்குகளை நடத்தி வருகிறோம். விவசாயிகள் மரக்கன்றுகள் நட்டு வைத்து 20 ஆண்டுகள் காத்திராமல், அதில் இருந்து தொடர் வருமானம் எப்படி ஈட்டுவது குறித்து ஆலோசனைகளையும் அளிக்கிறோம்.

முதலில் “சமவெளியில் மிளகு சாகுபடி சாத்தியமே” என கருத்தரங்கை தொடங்கினோம். தற்போது, தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் மிளகு முன்மாதிரி விவசாயிகள் உருவாகியுள்ளனர். கிட்டத்தட்ட 3 ஆயிரம் விவசாயிகள் மிளகு சாகுபடியைத் தொடங்கி உள்ளனர். இது மிகப்பெரிய மாற்றம்.

அதுமட்டுமின்றி, கடந்த 4 ஆண்டுகளாக பெங்களூரில் உள்ள தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம், கோழிக்கோட்டில் உள்ள இந்திய நறுமணப் பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனம் ஆகிய 2 தேசிய ஆராய்ச்சி நிறுவனங்களுடன் இணைந்து சமவெளியில் எப்படி நறுமணப் பயிர்கள் சாகுபடியைச் சாத்தியப்படுத்துவது என விவசாயிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினோம். அவகோடா போன்ற அதிக வருவாய் தரக்கூடிய பயிர்களையும் விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தி உள்ளோம்.

தமிழகத்தில் மிளகு சாத்தியமானதைப் போல், ஜாதிக்காய், அவகோடா சாகுபடியும் சாத்தியமாகி வருகிறது. பல மாவட்ட விவசாயிகள் அறுவடை எடுக்க ஆரம்பித்து விட்டனர். இப்படி தென்னை, பாக்கு மற்றும் பிற பயிர் சாகுபடியின் இடையே ஊடுபயிராக என்னெனன்ன மரப் பயிர்கள் பயிரிடலாம் என்பதை தெளிவுபடுத்தி விவசாயிகளின் பொருளாதார முன்னேற்றத்துக்கு வழிவகுத்து வருகிறோம்.

அந்த வகையில், இந்தாண்டு முதல் நிகழ்ச்சியாக கன்னியாகுமரி மாவட்டத்தில் குலசேகரத்தில் ” மகத்தான வருமானம் தரும் மாற்று விவசாயம்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெறுகிறது. இதில் பெங்களூர் தேசிய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றும் முனைவர் செந்தில்குமார், இந்திய நறுமணப்பயிர்கள் ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டியண்ணன், ஆர்த்தி மற்றும் பைசல் ஆகியோர் சிறப்புரை ஆற்றவுள்ளனர்.

அதுமட்டுமின்றி, மரம் சார்ந்த விவசாயத்தில் தேசிய மற்றும் மாநில விருதுகளை வென்ற முன்னோடி விவசாயிகளும் கலந்து கொண்டு தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவுள்ளனர். இது விவசாயிகளுக்கு மிகுந்த பயனளிக்கும் வகையில் இருக்கும். எனவே தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகள் அனைவரும் இக்கருத்தரங்கில் கலந்து கொள்ள கேட்டுக் கொள்கிறேன் என்றார். இக்கருத்தரங்கில் கலந்து கொள்ள விரும்புவோர் 94425 – 90079, 94425 – 90081 ஆகிய எண்களைத் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்தப் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னோடி மிளகு விவசாயி திரு. திருமலையும் உடன் பங்கேற்று சமவெளியில் மிளகு சாகுபடி செய்வதால் ஏற்படும் லாபங்கள் குறித்து பேசினார்.