மும்பையில் மதுவுக்கு அடிமையான தனது கணவரை விஷம் கொடுத்து கொலை செய்து, பின்னர் டியூஷன் வரும் சிறுவர்களின் உதவியுடன் உடலை எரித்த பள்ளி முதல்வர் கைது செய்யப்பட்டார்.
சவுசாலா வனப்பகுதியில் கடந்த 15-ம் தேதி அடையாளம் காண முடியாத அளவுக்கு எரிந்த நிலையில் ஒரு உடல் கண்டெடுக்கப்பட்டது. தடயவியல் பகுப்பாய்வு உள்ளிட்ட விரிவான ஆய்வுகளின் மூலம் இறந்தது நாக்பூர் யவத்மாளில் உள்ள சன்ரைஸ் ஆங்கில மீடியம் பள்ளியின் ஆசிரியர் சாந்தனு தேஷ்முக் (32) என்பதை போலீசார் கண்டறிந்தனர். தொடர்ந்து, உள்ளூர் குற்றப்பிரிவு நடத்திய தீவிர விசாரணையில், அதே பள்ளியின் முதல்வராக உள்ள அவரது மனைவி நிதி தேஷ்முக் (24) மீது சந்தேகம் வலுத்ததால் போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில், சாந்தனு மது போதைக்கு அடிமையானதாகவும், தினமும் குடித்துவிட்டு வந்து நிதியை சித்திரவதை செய்வார் என்றும், கடந்த 13-ம் தேதி இரவு
அதிகமாக மது அருந்தி விட்டு வந்த சாந்தனுவின் நடத்தையில் அதிருப்தியடைந்த நிதி கொடுத்து அவரை கொலை செய்துள்ளார். பின்னர், உடலை அப்புறப்படுத்த 3 டியூஷன் வரும் சிறுவர்களின் உதவியை நாடியுள்ளார். அடுத்த நாள் அதிகாலை நான்கு பேரும் சேர்ந்து அந்த உடலை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் கொண்டு போய் போட்டுவிட்டு வந்தனர்.
யாராவது அடையாளம் கண்டு விடுவார்களோ என்ற பயத்தில் அன்று இரவு மீண்டும் அந்த இடத்திற்குச் சென்று பெட்ரோல் ஊற்றி உடலை எரித்ததாகவும் தெரியவந்தது. நிதி தேஷ்முக் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். இதை தொடர்ந்து நிதியை கைது செய்த போலீசார்கள், மேலும், விசாரணைக்காக மாணவர்களையும் காவலில் எடுத்துள்ளதாக தெரிவித்தனர்.