• Mon. Nov 17th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

இலங்கை கடற்படையினர் அத்துமீறல்..,

ByR. Vijay

May 22, 2025

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த செருதூர் கிராமத்தை சேர்ந்த முருகேசன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் கோடியக்கரை தென்கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது இந்திய எல்லைக்குள் வந்த இலங்கை கடற்படை அதிகாரிகள் தமிழக மீனவர்களின் படகு மீது மோதி, அவர்கள் கடலில் விரித்த வலைமீது ரோந்து கப்பலை ஏற்றி சேதப்படுத்தியுள்ளனர். இதனால் அச்சம் அடைந்த தமிழக மீனவர்கள் தங்களை காப்பாற்றிக் கொள்ள அங்கிருந்து தப்ப முயன்றபோது அவர்களின் படகில் இருந்த ஜிபிஎஸ் கருவி, வாக்கி டாக்கி உள்ளிட்ட பொருட்களை பறித்ததுடன், மீனவர்களின் பைபர் படகில் இருந்து எரிபொருளையும் பறித்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டனர்.

அதனை தொடர்ந்து அவ்வழியே வந்த தமிழக மீனவர்கள் நடுக்கடலில் தவித்த செருதூர் கிராம மீனவர்களை பத்திரமாக கரைக்கு அழைத்து வந்தனர். அதனைத் தொடர்ந்து செருதூர் மீன் இறங்கு தளத்திற்கு இலங்கை கடற்படையால் பாதிக்கப்பட்ட சண்முகம், ஜெயராமன், சக்திமயில், மணிமாறன் ஆகிய மீனவர்கள் வந்து சேர்ந்தனர்.

இரண்டு லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள வலைகளை நாசப்படுத்தி சென்றதாகவும், இந்திய எல்லையில் மீன்பிடிக்கும் தங்கள் மீது இலங்கை கடற்படை அதிகாரிகள் அத்துமீறலில் ஈடுபடுவதாகவும் மத்திய மாநில அரசுகள் உடனடியாக மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.