சர்வதேச புகழ்பெற்ற சுற்றுலா நகரமான கன்னியாகுமரியில், கடலில் பெருமளவில் சாக்கடை நீர் கலப்பதால் சுற்றுச்சூழல் கடுமையாக மாசடைந்து வருகிறது. இதனால், பொதுமக்கள், மீனவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.

சுமார் 25,000 பேர் வசிக்கும் இந்த பகுதியில் வீடுகள், கடைகள், நிறுவனங்கள் உள்ளிட்டவை வெளியிடும் சாக்கடை நீர், எந்தவித சுத்திகரிப்பும் இல்லாமல் நேரடியாக கடலில் கலக்கிறது. இச்சாக்கடையுடன் மனிதக் கழிவுகளும் கலந்து புனித கடலை மாசுபடுத்தி வருவதாக பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
மேலும், நூற்றுக்கணக்கான மீனவர்கள் இந்த மாசடைந்த கடலேந்தி மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், அவர்கள் உடல்நலமும், வாழ்க்கையும் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருவதாக தெரிவித்துள்ளனர். கடலில் கலக்கும் சாக்கடை நீரால், மக்கள் சருமக் கோளாறுகள், வயிற்று நோய்கள், காய்ச்சல் உள்ளிட்ட நோய்களால் தொடர்ச்சியாக பாதிக்கப்படுகின்றனர்.
வழிபாட்டுத் தலங்கள் மற்றும் குடியிருப்புகள் அருகிலேயே சாக்கடை நீர் கலப்பதால், நோய் பரவும் அபாயம் அதிகரித்து வருகிறது. சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்கள் கடலில் இறங்கும்போது, அவர்கள் அறியாமலேயே மாசுபட்ட நீரில் மூழ்கி வருகின்றனர் என்பது கவலையளிக்கின்றது.
இந்த பிரச்சனையைப் பற்றி மக்கள், மீனவர்கள் மற்றும் சமூக இயக்கங்கள் தொடர்ந்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறுகின்றனர். இது தொடர்பாக தொகுதி எம்.எல்.ஏ தளவாய் சுந்தரம் சட்டமன்றத்தில் பிரச்சனையை எழுப்பியிருந்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாததால், மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

இந்த நிலையில், வரும் புதன்கிழமை (21ஆம் தேதி) ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு அமைதியான முறையில் போராட்டம் நடத்தப்படும் என உபகார மாதா திருத்தல பங்கு பேரவை துணைத்தலைவர் டாலன் டி.ஓட்டா அறிவித்திருந்தார்.
இந்நிலையில், கடலில் சாக்கடை கலப்பதை எதிர்த்து மீனவர்கள் போராட்ட அறிவிப்பு வெளியிட்டதை தொடர்ந்து, நாகர்கோவில் மேயர் மகேஷ் நேரடியாக சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தார். அவருடன் திருத்தல அதிபர் அருட்திரு உபால்ட், துணைத்தலைவர் டாலன் டிவோட்டா, செயலாளர் ஸ்டார்வின், பொருளாளர் ரூபன், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய திமுக செயலாளர் பாபு, கன்னியாகுமரி நகராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், துணைத்தலைவர் ஜெனஸ் மைக்கேல், கவுன்சிலர் ஆட்லின், திமுக நிர்வாகிகள் மெல்பின், மைக்கேல், நிஷார், கெய்சர், ஷியாம்
உட்பட பலர் இந்த ஆய்வில் கலந்து கொண்டனர்.
பின்னர் திருத்தல அலுவலகத்தில் வைத்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில், 15 நாட்களில் தற்காலிக தீர்வு வழங்கப்படும் என்றும், பின்னர் சாக்கடை நீரை சுத்தப்படுத்தும் பிளாண்ட் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் உறுதி அளித்தார்.