தமிழக அரசில் மருந்து விநியோகம் இல்லை. மக்களை தேடி மருத்துவம் திட்டம் தோல்வியடைந்ததால், பொதுமக்கள் தவித்து வருகின்றனர் என முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் விமர்சனம் தெரிவித்தார்.
தமிழக அரசின் மக்களுக்கு சுகாதார சேவைகளை நேரடியாக வீட்டிலேயே கொண்டு சேர்க்கும் நோக்குடன் “மக்களை தேடி மருத்துவம்” என்ற சிறப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம், சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் போன்ற நிலைத்த நோய்கள் உள்ளவர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு தேவையான மருந்துகளை வீடுகளுக்கே கொண்டு சென்று வழங்கும் பணியை சுகாதார ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
இத்திட்டத்தின் கீழ் கடந்த காலங்களில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பயன்பெற்று வந்தனர். ஆனால், கடந்த எட்டு மாதங்களாக போதிய அளவில் அரசு மருந்துகள் விநியோகிக்கப்படாததால், பொதுமக்கள் மருந்துகளுக்காக பெரிதும் தவித்து வருகின்றனர். இது குறித்து விசாரித்தபோது, மருந்து விநியோகத்தில் தொடர்ச்சியாக தாமதம் ஏற்படுவது, மருத்துவ ஊழியர்களுக்கு சவாலான சூழலை உருவாக்கி இருப்பதாக தெரிவித்தனர்.
ஏற்கனவே தனியார் மருத்துவமனைகள் அல்லது அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்கள், இத்திட்டத்தின் கீழ் அரசு வழங்கும் மருந்துகளை நம்பி இருந்த நிலையில், தற்போது அதுவும் கிடைக்காததால் குழப்பத்தில் உள்ளனர். அரசின் மருந்து விநியோகத்தையே நம்பி ஏற்கனவே எடுத்த மருந்துகளை நிறுத்தியவர்கள், தற்போது எந்த மாத்திரையை எடுத்துக் கொள்ள வேண்டும் என தெரியாமல் தவிக்கின்றனர்.

இது குறித்து முன்னாள் அமைச்சர் என். தளவாய் சுந்தரம் கூறும்போது..,
“இந்த அரசு விளம்பரத்துக்காகத்தான் திட்டங்களை செயல்படுத்துகிறது. ஆனால், அதன் பயன் பொதுமக்களிடம் போய் சேரவில்லை. பத்திரிகைகள், ஊடகங்கள், சமூக வலைத்தளங்களில் திட்டங்களை விளம்பரப்படுத்துவதில் அதிக ஆர்வம் காட்டுகிறது. ஆனால், நடைமுறை அம்சங்களில் கடுமையான தவறுகள் உள்ளன. இது மக்களை ஏமாற்றும் செயல். எனவே, உடனடியாக மருந்து விநியோகத்தைக் அதிகரித்து பொதுமக்களின் நலனை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.
மக்களுக்கு நேரில் சேவை செய்யும் சுகாதார ஊழியர்களும், மருந்துக்காக காத்திருக்கும் பொதுமக்களும் விரைவில் தீர்வு கிடைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.