திண்டுக்கல்லில் நடைபெற்ற பாஜக ஆர்ப்பாட்டத்திற்கு அழைத்து வரப்பட்ட 100 நாள் வேலை பார்க்கும் பெண்கள் சம்பளத்தை ஒழுங்காக வழங்கு, ஊதியத்தை உயர்த்திக் கொடு என கோஷம் போட்டதால் பரபரப்பு நிலவியது.
திண்டுக்கல்லில் பாகிஸ்தான் தீவிரவாதிகளால் காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை கண்டித்து திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் மணிக்கூண்டு அருகே இன்று 05.05.25 கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பாரதிய ஜனதா கட்சியின் கிழக்கு மாவட்ட தலைவர் முத்துராமலிங்கம் ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்திற்கு கட்சித் தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்தார். அப்பொழுது ஆர்ப்பாட்டத்தில் கூட்டத்தை காட்டுவதற்காக 100 நாள் வேலை திட்டத்தில் வேலை பார்க்கும் பெண்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோரை உடன் அழைத்து வந்தார். ஊர்வலத்தில் வந்த பாஜக கட்சி நிர்வாகிகள் பாரத் மாதா கி ஜே, பாரதி ஜனதா கட்சி வாழ்க என கோஷங்கள் எழுப்பினர்.
பின்னால் வந்த 100 திட்டத்தில் வேலை பார்க்கும் பெண்கள் 100 நாள் வேலைக்கு திட்டத்தில் ஒழுங்காக சம்பளம் கொடு, சம்பளத்தை உயர்த்தி கொடு என்ன கோஷங்கள் எழுப்பினர். பெண்கள் கோஷம் விடுவதை பார்த்த பாஜக நிர்வாகி உடனடியாக அவர்களை சத்தம் போட்டு இதுபோல் கோஷம் போடக்கூடாது என எச்சரிக்கை செய்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் அங்கு சிறிது நேரம் பெரும் பரபரப்பு நிலவியது.