கோவையில் 2006 ஆம் ஆண்டு செல்வபுரம் பகுதியில் தனியார் நிறுவன ஊழியர் மகேஷ் என்பவரை கத்தியால் தாக்கி 1 லட்சம் ரூபாயை கொள்ளை அடித்த வழக்கில் நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்ட செந்தில் குமார் என்ற குற்றவாளி, தீர்ப்பு வழங்கப்பட்ட ஏப்ரல் 28 ஆம் தேதி நீதிமன்ற வளாகத்தில் இருந்து தப்பி ஓடினார்.
இந்த வழக்கில் செந்தில் குமாருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து கோவை சார்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. நீதிமன்றத்தில் இருந்து தப்பிய குற்றவாளியை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

கோவை மாநகர காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில் செல்வபுரம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் பாண்டியம்மாள் மற்றும் அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார், செந்தில் குமாரை பிடிக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர். அவர் ஈரோடு சென்று இருக்கலாம் என்ற தகவல் கிடைத்ததும் அங்கு தேடுதல் நடத்தப்பட்டது. பின்னர், அவரது செல்போன் அழைவுகளை ஆய்வு செய்த போது, அவர் கோவையில் உள்ள நண்பர் ஒருவருடன் பேசியது தெரியவந்தது. அந்த நண்பரிடம் விசாரித்ததில், செந்தில் குமார் சேலத்திற்கு பேருந்தில் செல்வதாக கூறியதாக தெரிவித்தார். ஆனால், அவர் இருசக்கர வாகனத்தில் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், செந்தில் குமாருக்கு திருநங்கைகளுடன் நெருங்கிய தொடர்பு இருந்தது அவரது தொலைபேசி எண்களை ஆய்வு செய்த போது தெரியவந்தது. இது காவல் துறையினருக்கு அவரை கண்டுபிடிப்பதில் சவாலாக இருந்தது.
இருப்பினும், அவரது செல்போன் டவர் இருப்பிடங்களை வைத்து ஆராய்ந்ததில், அவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கிருஷ்ணகிரியில் இருப்பது உறுதியானது. உடனடியாக கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு, ஈரோடு மற்றும் சேலம் மாவட்ட காவல் துறையினரும் இணைந்து தேடுதல் வேட்டை நடத்தினர்.
கிருஷ்ணகிரியை சுற்றி வளைத்த போலீசார், முதலில் அவரது மனைவி மற்றும் குழந்தைகளை கண்டுபிடித்தனர். தொடர்ந்து நடத்திய தேடுதலில், வேறு வழியின்றி செந்தில் குமார் காவல் துறையினரிடம் சிக்கினார். கைது செய்யப்பட்ட செந்தில் குமாரை கோவைக்கு அழைத்து வந்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
நீதிமன்றத்தில் இருந்து தனது குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை மருத்துவமனைக்கு சென்று காண்பித்து வருகிறேன் ஏமாற்றி குடும்பத்துடன் இருசக்கர வாகனத்தில் தப்பிய குற்றவாளியை விரைவாகவும், சமயோஜிதமாகவும் செயல்பட்டு பிடித்த கோவை செல்வபுரம் குற்றப்பிரிவு ஆய்வாளர் பாண்டியம்மாள் மற்றும் தனிப்படை காவல் துறையினரை காவல் துறை உயர் அதிகாரிகள் பாராட்டி உள்ளனர்.