தமிழ்நாட்டில் உள்ள பாகிஸ்தானியர்களை கணக்கெடுக்கம் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
ஜம்மு – காஷ்மீர் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்க இந்திய ராணுவம் தயாராகி வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்தியாவில் தங்கி இருக்கும் பாகிஸ்தானியர்கள் 24 மணி நேரத்தில் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேபோல், பாகிஸ்தானியர்களுக்கான விசா சேவைகளை நிறுத்தி வைப்பதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானியர்களுக்கு இந்தியா வழங்கிய அனைத்து விசாக்களும் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 27) முதல் ரத்து செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த முடிவு பாகிஸ்தான் குடிமக்களுக்கு வழங்கப்படும் மருத்துவ விசாக்களுக்கும் பொருந்தும். இந்த நிலையில் தான், தமிழ்நாடு அரசும் ஒரு முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் உள்ள பாகிஸ்தான் நாட்டினரை கணக்கெடுக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இந்தியாவில் இருக்கும் பாகிஸ்தானியர்கள் நாளைக்குள் வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் தங்கி இருக்கும் பாகிஸ்தானியர்களை கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருவதாகவும், அவர்களை நாளைக்குள் வெளியேற்றக்கூடிய பணிகள் தீவிரப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிற்கு மருத்துவ சிகிச்சை, தொழில் ரீதியாக வந்தவர்களின் பட்டியலை தமிழ்நாடு காவல்துறை தயாரித்து வருகிறது. அதுமட்டுமின்றி தூதரகத்தில் இருந்து பாகிஸ்தான் அதிகாரிகள் வெளியேறவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல், கல்லூரிகளில் படிக்கும் பாகிஸ்தான் மாணவர்கள் குறித்து கணக்கெடுக்கப்படுகிறது. மருத்துவ விசா மூலமாக சென்னை, கோவை உள்ளிட்ட பெருநகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் பாகிஸ்தானியர்களை வெளியேற்றவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 500 பேர் வரை கணக்கெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் பாகிஸ்தானியர்கள் கணக்கெடுக்கும் பணி தீவிரம்
