நாகையில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட பாதாள காளியம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் மேளதாளம், காளி நடனத்துடன் களை கட்டிய முளைப்பாரி ஊர்வலத்தில், விரதமிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமிக்கு நேர்த்தி கடன் நிறைவேற்றனர்.
நாகப்பட்டினத்தில் அமைந்துள்ள பாதாள காளியம்மன் கோவிலின் சித்திரை திருவிழா கடந்த 11, ம் தேதி பால்காவடி அபிஷேத்துடன் வெகு விமர்சையாக துவங்கியது. நாள்தோறும் அம்பாள் அன்னவாகனம், ரிஷப வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வந்தார். சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான முளைப்பாரி ஊர்வலம் இரவு வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக கோவிலில் இருந்து சுவாமி புறப்பாடு நடைபெற்றது. அப்போது விநாயகர், முருகன், அம்பாளுக்கு மலர்கள் தூவி, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பக்தர்கள் சுவாமிக்கு பூஜை செய்து, தரிசனம் செய்தனர்.
சுவாமி ஊர்வலத்தில், தட்ஸ் மேளம் தாரை தப்பட்டை, கும்மியாட்டம் என திருவிழா களை கட்டியது. அப்போது அம்பிகைக்கு விரதம் இருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள் மஞ்சளாடை அணிந்து முளைப்பாரியை நகரின் முக்கிய வீதிகள் வழியாக சுமந்து வந்து ஊர்வலமாக சென்றனர். ஊர்வலத்தில் வழி நெடுகிலும் மேளதாள வாத்தியங்களுக்கு ஏற்றவாறு சிவன், பார்வதி, காளி நடனம் அங்கு களை கட்டியது.பின்னர் கோவிலை வந்தடைந்த பக்தர்கள் அங்கு முளைப்பாரி முன் கும்மி பாட்டு பாடி பாதாளகாளியம்மனுக்கு நேர்த்திக்கடன் நிறைவேற்றி சுவாமி தரிசனம் செய்தனர்.