கோவை மாவட்ட தையல் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நல வாரிய உறுப்பினர்களின் நீண்ட கால கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது 60 வயது முடிந்து கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா நல வாரியங்கள் மூலம் தற்போது ஓய்வூதியம் பெற்று வரும் முதியோர் ஓய்வூதியத்தை 1200 -ரூபாயில் இருந்து 1500 – ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. தமிழக அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்பு தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியில் அனைத்து ஓய்வூதியர்களுக்கும் 1500 ரூபாய் உயர்த்தி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்ததை சங்கத்தினர் சுட்டிக்காட்டினர்.
மேலும், நல வாரிய உறுப்பினர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் கல்வி, மகப்பேறு மற்றும் இறப்பிற்கான நிதி உதவியையும் உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
தற்போது கட்டுமானம் மற்றும் ஆட்டோ நல வாரியங்களுக்கு ஒரு மாதிரியாகவும், பிற நல வாரியங்கள் புறக்கணிக்கப்படும் நிலையையும் சுட்டிக் காட்டிய சங்கத்தினர், இந்த பாரபட்சமான போக்கு தொழிலாளர்கள் மத்தியில் கசப்புணர்வை ஏற்படுத்தி உள்ளதாக தெரிவித்தனர்.
எனவே, தங்களது கோரிக்கை மனுவை பரிசீலித்து தேர்தல் கால வாக்குறுதியை நிறைவேற்றித் தருவதோடு, அனைத்து வாரிசுகளுக்கும் பாகுபாடு இல்லாமல் ஒரே மாதிரியான உதவி நிதி கிடைத்திட வழிவகை செய்ய வேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த கோரிக்கைகள் குறித்து மாவட்ட நிர்வாகம் விரைவில் நடவடிக்கை எடுக்கும் என்று தையல் கலைஞர்கள் சங்கத்தினர் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.





