மானாமதுரை அருகே மத்திய நாற்றங்கால் பண்ணை அமைக்க சிறப்பு கிராம சபை கூட்டத்தில் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள செய்களத்தூர் ஊராட்சியில் வனத்துறை சார்பில், மத்திய நற்றாங்கல் பண்ணை அமைக்க திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்றது. இதனால் கண்மாய்களுக்கு செல்லும் தண்ணீர் வழித்தடம் பாதிக்கப்பட்டு, விவசாயம் மற்றும் கால்நடைகள் வளர்ப்பு பாதிப்படையும் என கருதிய கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அரசு தொடர்ந்து பணிகள் மேற்கொண்டதையடுத்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் உயர் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, சிறப்பு கிராம சபை கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கிராம மக்களின் கருத்துகள் கேட்கப்பட்ட நிலையில் அவர்களின் சந்தேகங்களையும், விளக்கங்களையும் ஆட்சியர், ஊராட்சி, வருவாய் துறை, வனத்துறை அதிகாரிகள் எடுத்து கூறினார்கள். இதனை பொறுமையாக கேட்ட கிராம மக்கள் தங்களின் விவசாயம் பாதிப்படையும் என கருதி நாற்றங்கால் பண்ணை அமைக்கும் பணியை கைவிட கோரி, ஏகமனதாக கூறினர். இதனையடுத்து ஆட்சியர் ஆஷா அஜீத் உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு அறிக்கை அனுப்பபடுவதாக தெரிவித்தார். நாற்றங்கால் பண்ணை அமைக்கும் பணி கைவிடபடும் என்பதால் கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
