சித்திரை மாத பிரமோற்சவ விழாவை முன்னிட்டு, திருநீர்மலையில் உள்ள ரெங்கநாத பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து தேர் இழுத்து வருகின்றனர்.
சென்னை பல்லாவரம் அடுத்த திருநீர்மலையில் பிரசித்தி பெற்ற ரெங்கநாத பெருமாள் கோயில் உள்ளது.இந்த ஆண்டு சித்திரை பெருவிழா கடந்த 12 ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி, தினமும் காலை மற்றும் மாலை வேளையில் பெருமாள், தாயாருடன் திருவீதி உலா நிகழ்ச்சி நடந்தது.

முக்கிய நிகழ்வான சித்திரை மாத தேரோட்டம் விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு, பெருமாள் மற்றும் தாயாருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் செய்யப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவர் பெருமாள் தாயாருடன் எழுந்தருளினார்.
சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் ‘‘கோவிந்தா, கோவிந்தா” என்ற கோஷத்துடன் வடம் பிடித்து தேர் இழுத்தனர். கோயிலில் இருந்து புறப்பட்ட தேர் நான்கு மாட வீதிகள் வழியாக திருநீர்மலையை சுற்றி உலா வந்து கொண்டிருக்கிறது, இதில், சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் பெருந்திரளாக கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இதையொட்டி, பக்தர்களுக்கு அப்பகுதி பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் குளிர்பானங்கள், நீர், மோர் ஆகியவற்றை இலவசமாக வழங்கினர். பொதுமக்கள் தேங்காய் உடைத்தும் பாடல்கள் பாடியும் உற்சாகமாக தேரின் முன்பு வந்து கொண்டிருக்கின்றனர் ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேர் நான்கு மாத வீதிகளிலும் வளம் வந்து கொண்டிருக்கிறது .