தேனி மாவட்டம் போடிமெட்டு வழியாக கேரளாவிற்கு கடத்த முயன்ற 7 லிட்டர் சாராயத்தை தமிழக எல்லை முந்தல் சோதனைச் சாவடியில் பறிமுதல் செய்த மதுவிலக்கு போலீசார் இது தொடர்பாக கேரளாவை சேர்ந்த ஒருவரை கைது செய்தனர்.
தேனி மாவட்டம் தமிழக கேரள எல்லை போடி முந்தல் சோதனை சாவடியில் உத்தமபாளையம் மதுவிலக்கு காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஆம்னி வேனை நிறுத்தி அதில் வந்தவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறியதால் போலீசார் வேனை சோதனை செய்தனர்.

அப்போது வேனில் 2 இரண்டு லிட்டர், 2 ஒரு லிட்டர், 2 அரை லிட்டர் என ஆறு பிளாஸ்டிக் கேன்களில் ஏழு லிட்டர் சாராயம் மறைத்து வைத்திருந்த தெரிய வந்தது.
கடத்தி வரைபட்ட 7 லிட்டர் சாராயத்தையும், வேனையும் பறிமுதல் செய்த உத்தமபாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்துறையினர், வண்டியில் வந்தவரை பிடித்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் அவர் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் நெடுங்கண்டம் அருகே பழியன் கண்டத்தைச் சேர்ந்த செரியன்(55) என்பதும், இவர் மகாராஷ்டிராவில் தயாரிக்கப்பட்ட கள்ள சாராயத்தை, வேனில் தமிழகம் வழியாக கேரளா மாநிலத்திற்கு கொண்டு செல்வதும் தெரிய வந்தது.
இதனை அடுத்து குற்றவாளி செரியனை உத்தமபாளையம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மேஜிஸ்ட்ரேட் முன் ஆஜர் படுத்தி உத்தமபாளையம் கிளைச் சிறைச்சாலையில் அடைத்தனர்.