நாடகக் கலை மூலம் பள்ளி குழந்தைகளுக்கு நன்னெறி கல்வியை போதித்து வருகிறார் மதுரையை சேர்ந்த நாடக ஆசிரியர் செல்வம். பகுதி நேர நாடக ஆசிரியராக பணிபுரிந்து வரும் இவர் கடந்த 20 ஆண்டுகளாக தமிழக அரசின் கலை பண்பாட்டு துறையின் நாடக கலைஞராகவும், உறுப்பினராகவும் இருந்து வருகிறார். நாடகத் திறமையினை அரசு மற்றும் அரசு பள்ளி குழந்தைகளின் முன்னேற்றத்திற்காக பயன்படுத்தி வருகிறார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அருள்புரத்தில் இயங்கி வரும் சாய் நவஜீவன் அறக்கட்டளையின் இலவச கற்றல் மையத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் இலவசமாக பயன்று வருகின்றனர். நாடகாசிரியர் செல்வம் தமிழ்நாடு முழுவதும் 1000-க்கும் மேற்பட்ட அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு நன்னெறி கல்வியை நாடகம் மூலம் போதித்து வரும் நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் முதல் கட்டமாக சாய் நவ்ஜீவன் அறக்கட்டளையுடன் இணைந்து 25 பள்ளிகளுக்கு இந்த பயிற்சியை தொடங்கியுள்ளார்.

கதை சொல்லுதல்,ஓவியம் வரைதல்,காகித மடிப்பு கலை,பாடல் பாடுதல்,பொம்மலாட்டம், கழிவு பொருட்களை இருந்து கலை பொருட்களாக மாற்றுதல்,நாடக கலை வழியாக அறம் கற்பித்தல், என அரசு பள்ளி குழந்தைகளுக்கு இவர் ஒரு வரப் பிரசாதமாக அமைந்துள்ளார்.மேலும் பள்ளி மாணவர்களுக்கு நற்பண்புகளின் தேவை குறித்தும், உதவும் தன்மை, அன்பு, அரவணைப்பு, இயற்கையின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்வது என மாணவர்களின் மேம்பட்ட எதிர்காலத்திற்கு இவரது பயிற்சி பெரிதும் உதவுவதாக இவரிடம் பயிலும் மாணவர்கள் தெரிவித்தனர்.
மேலும் இவரிடம் பயிலும் பள்ளி குழந்தைகள் தங்களைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை நாடக வடிவில் மாற்றுவது, கலைத்திறன் மூலம் உணர்வுகளை எண்ணங்களை புரிந்து கொள்வது என தங்களை மேம்படுத்தி அதையே வாழ்வியலாக மாற்றிக் கொள்ள முடியும் என நாடக ஆசிரியர் செல்வம் கூறுகிறார்.”தினம் ஒரு அரசு பள்ளி” என்ற திட்டத்தின் மூலமாக 10 பேர் கொண்ட குழுவினர் தினம் தினம் ஒவ்வொரு பள்ளிக்கு சென்று அரசு பள்ளி மாணவர்களின் வாழ்க்கைக்கு ஒளியேற்றி வருகின்றனர்.
மற்றவர்களை ரோல் மாடலாக பார்ப்பதை விட நாமே ரோல் மாடலாக மாற வேண்டும் என்பதை மாணவர்களிடம் போதிப்பதாகவும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் நன்னெறி வகுப்புக்கென பிரத்தேக பாடத்திட்டத்தை கொண்டு வர வேண்டும் எனவும் இவர் கோரிக்கை வைத்துள்ளார். பள்ளிக் குழந்தைகளுக்கு நன்னெறி கல்வியை போதிக்க முடிவு செய்து நாடகக் கல்வி வழியே அறம் என்ற முன்னெடுப்பை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நாடக ஆசிரியர் செல்வத்தின் பணி அனைவராலும் பாராட்டுக்குரியதே..!