• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

ரம்ஜான் தொழுகை ஆண்கள் பெண்கள் பங்கேற்பு..,

முஸ்லிம்களின் முக்கிய பண்டிகைகளில் ரம்ஜான் பண்டிகையும் ஒன்றாகும். ஈகை திருநாளாக இதை கொண்டாடுகிறார்கள். அன்பு, அமைதி, சகோதரத்துவம் ஆகியவற்றை வலியுறுத்தும் விதமாக ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. ரம்ஜான் பண்டிகைக்கு முன்பு ஒரு மாதம் வரை முஸ்லிம்கள் நோன்பு மேற்கொண்டிருந்தார்கள்.

நோன்பு சமயத்தில் சூரிய உதயத்துக்கு முன்பு உணவருந்தி விட்டு, சூரியன் மறையும் வரை உணவு, தண்ணீர் இன்றி இருப்பார்கள். பின்னர் மாலையில் இப்தார் விருந்து மேற்கொள்வார்கள். ரமலான் நோன்பு கடைப்பிடிப்பது முஸ்லிம்களின் 5 கோட்பாடுகளில் ஒன்றாகும். ஒரு மாத நோன்பு கடைபிடித்த பின்னர் கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று ஒரு தரப்பினர் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடிய நிலையில், இன்று பெரும்பாலானோர் கோலாகலமாக கொண்டாடுகின்றனர்.

இதையொட்டி, நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். காலையிலேயே ஆயிரக்கணக்கானோர் பள்ளிவாசல்களில் திரண்டு சிறப்பு தொழுகையில் பங்கேற்றனர். மேலும் பெரிய மைதானத்திலும் சிறப்பு தொழுகை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நாகர்கோவிலில் பாவா காசிம் பள்ளியில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

தொழுகை முடிந்ததும் ஒவ்வொருவரும் கட்டித்தழுவி ரம்ஜான் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். ஆதரவற்றவர்கள், ஏழைகள், முதியவர்களுக்கு உணவு அளித்து முஸ்லிம்கள் ரம்ஜானை கொண்டாடினர். நாகர்கோவிலில் வடசேரி, கோட்டார், இடலாக்குடி, இளங்கடை, கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களில் நடைபெற்ற தொழுகையில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ரம்ஜான் தொழுகை நடந்தது. இதில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் தனித்தனியாக தொழுகை நடத்திய பிறகு ரம்ஜான் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.