சென்னை திருவான்மியூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் 1800-க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
நடிகர் விஜய் கடந்த ஆண்டு தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கியதுடன் கட்சியை முறைப்படி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார். இதன் அடிப்படையில், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம், விஜய் தலைமையில் சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் காலை 9 மணிக்கு தொடங்குகிறது. இதில் 137 செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் 1800-க்கும் அதிகமான பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர்.
மேலும் 120 மாவட்டங்களாக தமிழக வெற்றிக் கழகம் பிரிக்கப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் மாவட்டச் செயலாளருடன் 15 பேர் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் பனையூரில் இருந்து திருவான்மியூருக்கு வரும் விஜய்க்கு சிறப்பான வரவேற்பு அளிக்க தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் ஏற்பாடு செய்துள்ளனர். தொடர்ந்து நடைபெறும் கூட்டத்தில் தமிழக வெற்றிக்கழகத்தின் அடுத்த கட்ட நகர்வு குறித்து முக்கிய முடிவுகளை விஜய் அறிவிக்க உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பொதுக்குழு நடக்கும் மையத்தை சுற்றிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த கூட்டத்தில் பங்கேற்க இருக்கும் அனைவருக்கும் டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. நுழைவுவாயிலில் கியூஆர் கோடு ஸ்கேன் செய்யப்பட்ட பிறகே அனைவரும் கூட்டரங்கிற்குள் அனுமதிக்கப்படுவார்கள். இந்த நிலையில், கூட்டம் நடைபெறும் இடத்தை தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.