என்னை சரித்திரப்பதிவு குற்றவாளி எனச்சொல்லும் பாஜக தலைவர் அண்ணாமலை, கர்நாடகாவில் டூப் போலீஸ்; லஞ்சம் வாங்கிய பேர்வழி என தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
திருச்சியில் நேற்று நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், ‘சென்னையில் ரவுடி சரித்திர பதிவேட்டில் இருந்தவர் அமைச்சர் சேகர்பாபு. இப்படிப்பட்டவர்கள் அமைச்சர்களாக இருந்தால் நாடு விளங்குமா?’ என கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில்,, ‘குற்றப் பின்னணியில் உள்ள அமைச்சர்கள் என பாஜக தலைவர் அண்ணாமலை சொல்வது, பாஜக ஆளும் மாநிலங்களைச் சேர்ந்தவர்களை மனதில் வைத்துதான் சொல்லி இருப்பார். மேலும் படிக்காதவர்கள் எப்படி பள்ளியைப் பற்றி பேசலாம் என்று கேள்வி எழுப்புகிறார். ஒருவேளை காமராஜரை களங்கப்படுத்துகிறாரா அண்ணாமலை? அவர் ஒரு தற்குறி. மனிதாபிமானத்தைக் கொண்டவர்கள் உயர் பதவிக்கு வந்தால் மக்கள் சேவையை தலையாய கடமையாக ஏற்று செயல்படுவார்கள். இது அண்ணாமலை போன்ற தற்குறிகளுக்கு தெரியாது.
என்னை சரித்திரப் பதிவு குற்றவாளி எனச் சொல்லும் அண்ணாமலை, கர்நாடகாவில் ஒரு டூப் போலீஸ்; லஞ்சம் வாங்கிய பேர்வழி என்று சொல்கிறேன். ஆதாரம் இல்லாமல் வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என பேசுவது நியாயமில்லை. ஆதாரத்தை காட்டிதான் அண்ணாமலை குற்றச்சாட்டை முன்வைக்க வேண்டும். ஆதாரத்தைக் காட்ட வேண்டும். மேலும் திமுகவினரை சிறைக்கு அனுப்பாமல் ஓயமாட்டேன் என்று பாஜகவைச் சேர்ந்த ஹெச்.ராஜா கூறுகிறார். திமுகவில் இருப்பவர்கள் சிறைக்கு அஞ்சாத சிங்கங்கள். சிறை செல்ல வேண்டும் என்றாலும் சிரித்த முகத்துடன் அதை எதிர்கொள்ள தயாராக இருப்பதுதான் திமுக” என்றார்.