திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் பங்குனி பெருவிழா -8வது நாளாக பச்சைக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி சுப்பிரமணிய சுவாமி – தெய்வானை வீதிஉலா வந்தனர்.

ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் பங்குனி பெருவிழா கடந்த 5 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது முக்கிய நிகழ்வான 17 ஆம் தேதி சுப்பிரமணிய சுவாமிக்கு பட்டாபிஷேகமும், 18 ம்தேதி சுப்பிரமணிய சுவாமி – தெய்வானை திருக்கல்யாணம் வைபோகமும் உச்ச நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதனையொட்டி சுவாமி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்கார வாகனத்தில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். விழாவின் 8-ஆம் நாளான இன்று தென்பரங்குன்றம் பகுதியில் சுப்பிரமணிய சுவாமி – தெய்வானைக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடைபெற்றது. சிறிய சப்பரத்தில் மூஞ்சூறு வாகனத்தில் விநாயகரும், சண்டிகேஸ்வரரும் வீதி உலா வந்தனர்.

இதைத்தொடர்ந்து மங்கள வாத்தியம் முழங்க சுப்பிரமணிய சுவாமி – தெய்வானை பச்சை குதிரை வாகனத்தில் எழுந்தருளி பெரியரத வீதி, சன்னதி தெரு, கீழரத வீதி, மேலரதவீதிவழியாக சன்னதியை அடைந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். வீதி உலாவின் போது ஏராளமான பக்தர்கள் வீதிகளில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.