• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

கொங்கு நாடு கல்லூரியில் இரண்டு நாள் கருத்தரங்கு

BySeenu

Mar 7, 2025

மேற்கு மலைத்தொடர்ச்சி சார்ந்த வனப்பகுதிகளில் பல்லுயிர் பராமரிப்பு மற்றும் சூழலமைப்பு மேலாண்மை குறித்த இரண்டு நாள் கருத்தரங்கம் கோவை கொங்கு நாடு கலை அறிவியல் கல்லூரி அரங்கில் நடைபெற்றது.

கோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் முதுநிலை அறிவியல் விலங்கியல் மற்றும் ஆய்வுத்துறை, வனவிலங்கு உயிரியல் துறை ஆகியன கொல்கத்தா, இந்திய விலங்கியல் ஆய்வகத்துடன் இணைந்து நடத்தும் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் பல்லுயிர்ப் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மை என்ற தலைப்பிலான இரண்டு நாள் தேசியக் கருத்தரங்கத்தின் தொடக்க விழா கல்லூரி வளாகத்தில் உள்ள முனைவர் மாரப்ப கவுண்டர் ஆறுச்சாமி கலையரங்கில் நடைபெற்றது.

இக்கருத்தரங்கின் சிறப்பு விருந்தினராகச் சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான அமைச்சகத்தின் கோயம்புத்தூர், மாநில வன சேவைக்கான மத்திய அகாடமியின் தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் முதல்வர் திருநாவுக்கரசு பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், ” மேற்குத் தொடர்ச்சி மலையின் பல்லுயிர்ப் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மைக்குப் பெரும் சவாலாகக் கட்டடங்களின் பெருக்கம் அமைகிறது. வனவிலங்குகள் செல்லும் வழித்தடங்களில் கட்டடங்களைக் கட்டுவதால் மனித, விலங்கு மோதல் ஏற்படுவதுடன் விலங்குகளுக்கான உணவு, நீர் ஆகியவை கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது என்றும் மேற்குத்தொடர்ச்சி மலையை 160 வகையான அந்நியக் களைச் செடிகள் ஆக்கிரமித்துள்ளன என்றும் அதனால் நம்முடைய மண் சார்ந்த தாவரங்கள் பெரும் அழிவிற்கு உள்ளாகின்றன. மேற்குத் தொடர்ச்சி மலையின் பல்லுயிர்ப் பாதுகாப்பை உறுதிசெய்ய அரசின் கொள்கைகளும் தன்னார்வ அமைப்புக்களின் துணையும் மட்டும் போதாது என்றும் பொதுமக்களும் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்” என்றும் வலியுறுத்தினார்.

இக்கருத்தரங்கில் கல்லூரியின் செயலர் மற்றும் இயக்குநர் டாக்டர் சி.ஏ. வாசுகி தலைமையுரையாற்றினார். தொடர்ந்து கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரிக்கும் சென்னை, பாம்பு பூங்கா அறக்கட்டளைக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. கருத்தரங்கு துவக்க விழாவில் சென்னை, பாம்பு பூங்கா அறக்கட்டளையின் நிர்வாகத் தலைவர் முனைவர் எஸ். பால்ராஜ்,கேரள வன ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் முனைவர் பி.எஸ். ஈசா மத்தியபிரதேச மாநில முன்னாள் தலைமை வனப் பாதுகாவலர் முனைவர் திலீப்குமார் ஆகியோர் கருத்தரங்க நோக்கவுரையாற்றினர். துவக்க விழாவில் , கல்லூரியின் முதல்வர் முனைவர் சங்கீதா விலங்கியல் துறையின் பேராசிரியர் முனைவர் இராஜா, விலங்கியல் துறை இணைப்பேராசிரியர் முனைவர் பினுக்குமாரி மற்றும் இயற்கை ஆர்வலர்கள் மாணவ,மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்.