• Thu. Dec 25th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

இது இன்பத் தமிழ்நாடு, ஆதிக்கத்திற்கு இடமில்லை ஓடு: மு.க.ஸ்டாலின் ஆவேசம்!

ByP.Kavitha Kumar

Feb 25, 2025

இந்தி ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வரை ஆதிக்கத்துக்கு எதிரான போராட்டம் தொடரும் என்று நான் உறுதி அளிக்கிறேன் என்று திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது தொடர்பாக திமுக தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், நம் உயிர்நிகர்த் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் நமக்கு வழங்கியுள்ள ஐம்பெரும் முழக்கங்களில் மூன்றாவது முழக்கம், ‘இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்’ என்பதாகும். இன்றும் அதனை எதிர்க்கிறோம். ‘இந்தி படிக்காதே’ என்று யாரையும் தடுக்கவில்லை. இந்தியை எங்கள் மீது திணிக்காதே என்று ஆதிக்க சக்திகளுடன் அறப்போரைத் தொடர்ந்து நடத்துகிறோம். இந்தப் போரில் ஒருபோதும் சமரசமில்லை.

அண்ணா வகுத்த இருமொழிக் கொள்கையை கடைபிடிப்பதால்தான் தமிழ்நாடு வளர்ச்சி பெற்றுள்ளது. எந்த மொழிக்கும் நாம் எதிரி இல்லை, யார் எந்த மொழியை கற்கவும் தடையாக நிற்பதில்லை. ஆனால் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வரை அதற்கு எதிரான போராட்டும் தொடரும். இது இன்பத் தமிழ்நாடு. இங்கே ஆதிக்கத்திற்கு இடமில்லை ஓடு’ என்று துணிந்து சொல்லும் வலிமை நமக்குண்டு.

ஆதிக்கத்தை எதிர்ப்பதும், தாய் மொழியைக் காப்பதும் திராவிட முன்னேற்றக் கழக உடன்பிறப்புகளின் இரத்தத்தில் ஊறிய உணர்வு. உயிர் அடங்கும் வரை அந்த உணர்வு அடங்காது. தமிழை அழிக்க நினைக்கும் ஆதிக்க மொழி எதுவாக இருந்தாலும் அதை அனுமதிக்க மாட்டோம். தாய்மொழியை அடிப்படையாகவும் ஆங்கிலத்தை தொடர்பு மொழியாக கடைபிடித்து வருகிறது தமிழ்நாடு.தமிழை காக்கும் அறப்போரில் உங்களில் ஒருவனாக என்றும் துணை நிற்பேன். இந்தி ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வரை ஆதிக்கத்துக்கு எதிரான போராட்டம் தொடரும் என்று நான் உறுதி அளிக்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.