டெல்லியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், பீகார், ஒடிசா மாநிலங்களில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
டெல்லி என்சிஆர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று அதிகாலை 5.36 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 4.0 ஆக பதிவானது. இது பூமியில் இருந்து 5 கிலோமீட்டர்கள் ஆழத்தில் ஏற்பட்டதாக நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து நில அதிர்வுகள் ஏற்படும் வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதனால், நிலநடுக்கம் காரணமாக மக்கள் பீதி அடைய வேண்டாம் என்றும், முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்த நிலையில் டெல்லியைத் தொடர்ந்து பீகார், ஒடிசா மாநிலங்களில் அடுத்தடுத்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம் மக்களிடையே அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டவுடன் அலறி அடித்துக் கொண்டு மக்கள் வீடுகளில் இருந்து சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். ஒடிசா மாநிலத்தில் இன்று காலை 8.55 மணிக்கு நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது. இந்த நிலஅதிர்வு 4.7 ஆக பதிவாகியது. அதற்கு முன்னதாக 8.02 மணிக்கு பீகார் மாநிலத்தில் நிலஅதிர்வு 4 புள்ளிகளாக பதிவாகியது. டெல்லி, பீகார், ஒடிசா மட்டுமில்லாமல் ஹரியாணா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட பகுதிகளிலும் இந்த நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளது.