பிரதமர் நரேந்திர மோடி குறித்த கேலிச்சித்திரம் வெளியிட்ட விகடன் இணையதளம் முடக்கப்பட்டதற்கு மக்கள் நீதி மய்ய தலைவர் நடிகர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
விகடன் பிளஸ் என்ற விகடனின் இணைய இதழின் அட்டையில் கடந்த 10-ம் தேதி ஒரு கேலிச்சித்திரம் (கார்ட்டூன்) வெளியானது. அதில், அமெரிக்காவிலிருந்து கைகளிலும், கால்களிலும் விலங்கிடப்பட்டு இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்காமல் பிரதமர் நரேந்திரம் மோடி மவுனம் காத்ததை விமர்சித்து அந்த கார்ட்டூன் வரையப்பட்டிருந்தது. இதுகுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில். விகடனின் இணைய தளம் முடக்கப்பட்டது. ஆனால், இந்த முடக்கம் குறித்து மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை.
விகடன் இணையதளம் திடீரென முடக்கப்பட்டதற்கு மக்கள் நீதி மய்ய தலைவரான நடிகர் கமல்ஹாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது எக்ஸ் தளப் பக்கத்தில், “ஆனந்த விகடனின் எல்லா கருத்துக்களுடனும் ஒத்துப்போவது என் கடமை அல்ல. விகடன் தன் கருத்தைச் சொல்லும் உரிமையை யார் பறிக்க முயன்றாலும் கடுமையாக எதிர்த்து அந்த வழிப்பறியைத் தடுக்க வேண்டியது என் கடமை. கட்சியின் மத்தியத் தலைமையைத் திருப்திப்படுத்த மாநிலத் தலைமை வெட்டிய இந்தச் சிறுகிணறு, பேச்சுரிமை எனும் பெரும்பூதத்தைக் கிளப்பிவிட்டிருக்கிறது.
தமிழ்நாட்டு மக்கள் மட்டுமே புரிந்து ரசித்திருக்கும் ஒரு கேலிச்சித்திரத்தை நாடே புரிந்துகொள்ளும்படி செய்தது விசுவாசிகளே நினைத்துப் பார்க்காத விஸ்வரூபம். மக்கள் நீதி மய்யம் மத்திய அரசின் இந்த நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறது. எங்கள் பேச்சுரிமை மீதோ, மொழியின் மீதோ கைவைத்த எந்த யானையையும் அடிசறுக்க வைக்கும் தமிழ்நாடு. இதைச் சொல்லும் தைரியத்தை ஆயிரமாண்டு தமிழ்ச் சரித்திரம் தருகிறது எங்களுக்கு. வாழிய செந்தமிழ்; வாழ்க நற்றமிழர்; வாழிய இந்திய மணித்திருநாடு” என்று அவர் பதிவிட்டுள்ளார்.













; ?>)
; ?>)
; ?>)