சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு காரணமாக, விமானம் 5 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.
விமானத்தில் ஏற்பட்ட இயந்திரப் கோளாறை விமானி, தகுந்த நேரத்தில் கண்டுபிடித்ததால், விமானத்தில் இருந்த 264 பயணிகள் உட்பட 276 பேர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.
சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், வழக்கமாக சிங்கப்பூரில் இருந்து இரவு 10 மணிக்கு, சென்னைக்கு வந்து விட்டு இரவு 11.25 மணிக்கு, சென்னையில் இருந்து சிங்கப்பூர் புறப்பட்டு செல்லும். ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு இந்த விமானம் இணைப்பு விமானமாகவும் இருப்பதால், இந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில், பயணிகள் கூட்டம் எப்போதும் அதிகமாக இருக்கும்.
அதைப்போல் நேற்று இரவு இந்த விமானத்தில் சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்வதற்கு 264 பயணிகள் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வந்து, விமானத்தில் ஏறுவதற்கு தயாராக இருந்தனர். இந்த விமானம் இரவு 10 மணிக்கு வர வேண்டிய விமானம் சற்று நேரம் தாமதமாக இரவு 10:26 மணிக்கு சென்னை வந்து சேர்ந்தது.
இதை அடுத்து பயணிகள் அனைவரும் விமானத்தில் ஏற்றப்பட்டு, விமானம் ஓடுபாதையில் ஓடுவதற்கு தயாரானது. அதற்கு முன்னதாக விமானி விமானத்தில் இயந்திரங்களை சரிபார்த்த போது, விமானத்தில் இயந்திர கோளாறு இருப்பதை கண்டுபிடித்தார். இதை அடுத்து விமானம் தாமதமாக புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது.
அதோடு விமானத்தின் கதவுகள் திறக்கப்பட்டு, பொறியாளர்கள் குழுவினர் விமானத்துக்குள் ஏறி, விமானத்தை பழுது பார்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதோடு பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து கீழே இறக்கப்பட்டு விமான நிலைய ஓய்வறையில் தங்க வைக்கப்பட்டனர்.
அதன் பின்பு அந்த விமானம் இயந்திர கோளாறு சரி செய்யப்பட்டு, சுமார் 5 மணி நேரம் தாமதமாக, இன்று அதிகாலை 4:15 மணிக்கு சென்னையில் இருந்து சிங்கப்பூர் புறப்பட்டு சென்றது. இதனால் சிங்கப்பூர், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு செல்லும் 264 பயணிகள், சென்னை விமான நிலையத்தில் 5 மணி நேரத்திற்கு மேலாக அவதிப்பட்டனர்.
அதே நேரத்தில் விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறை விமானி, தகுந்த நேரத்தில் கண்டுபிடித்து எடுத்த துரித நடவடிக்கையால், விமானம் ஆபத்திலிருந்து தப்பியதோடு விமானத்தில் பயணிக்க இருந்த 264 பயணிகள், 12 விமான ஊழியர்கள் உட்பட 276 பேர் நல்வாய்ப்பாக தப்பினர். இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.