குமரி மின்வாரிய அலுவலகங்களில் மின்கட்டணம் வாங்க மறுத்ததால், சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
தமிழ்நாட்டில் 5.45 கோடி மின்இணைப்புகள் உள்ளன. தாழ்வழுத்த மின்நுகர்வோர்கள் மட்டும் சுமார் 3 கோடி பேர் உள்ளனர். இதில் ஒரு பகுதியினர் மட்டுமே வங்கி, இ.சேவை மையம், உள்ளிட்ட ஆன்லைன் முறையில் கட்டணம் செலுத்தி வருகின்றனர். பெரும்பாலான மக்கள் மின்வாரிய அலுவலகங்களில் மின்கட்டணத்தினை நேரடியாக செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் மின்கட்டணங்களை நுகர்வோரிடம் பணமாக பெற மின்துறை ஊழியர்கள் மறுத்து வருகின்றனர்.
குறிப்பாக ஒரு மின்கட்டண அட்டைக்கு ரூ 10 ஆயிரத்திற்குள் இருப்பின் பணமாகவும், காசோலை, வரைவோலை மூலமாகவும் பெறப்பட்டது. அத்தொகைக்கு மேல் கட்டணம் செலுத்த வருபவர்களிடம் காசோலை, வரைவோலை அல்லது ஆன்லைன் பரிமாற்றம் என்பது கண்டிப்பான நடைமுறையாக இருந்து வந்தது. ஆனால் சமீபகாலமாக பல இடங்களில் ஆயிரம் ரூபாய் மின்கட்டணம் கட்டவேண்டும் என்றாலே பணமாக வாங்க மின்துறை ஊழியர்கள் மறுப்பதாக புகார்கள் வெளிவருகிறது.

இது தொடர்பாக தங்களுக்கு அரசின் மூலம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக கூறி பொதுமக்களிடம் ஊழியர்கள் பணத்தினை வாங்க மறுத்து வருகின்றனர். ஆனால் இதுவரை இதுகுறித்து எவ்வித ஆணையும் அரசு பிறப்பிக்கவில்லை எனத் தெரிகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவதுடன் அலைக்கழிக்கப்படுவதால் பெரிதும் பாதிப்பு அடைந்து வருகின்றனர்.
மின்துறை இவ்வாறு புதிய நடைமுறைகளை செயல்படுத்துவது தொடர்பாக எவ்வித அறிவிப்பும் வெளியிடாத நிலையில் மக்களுக்கு தாங்கள் மேற்கொள்ளும் சேவையினை முடக்கி வருவது இதன்மூலம் திட்டவட்டமாக தெரியவருகிறது. மத்திய அரசு முழுக்க அனைத்து துறைகளையும தனியார் மயப்படுத்துவது போல் தமிழக அரசும் தனியார்மயமாக்க முயற்சிப்பது போல் அதன் நடவடிக்கைகள் உள்ளது.
எனவே மக்கள் பாதிப்பு அடையும் வகையில் உள்ள புதிய நடைமுறைகளை மாற்றி ஏற்கனவே மின்கட்டணம் வசூலித்தது போல் மக்களிடம் பணம் வசூலிக்கப்பட வேண்டும். மின் கட்டணம் செலுத்துவதில் மக்களை அலைக்கழிப்புக்கும், பணவிரயத்திற்கும், மன உளைச்சலுக்கும், விவாதங்களுக்கும் இடம் அளிக்கும் வகையில் உள்ள நிலையினை மாற்றி மக்களிடம் கட்டணம் பெறும் சேவையினை தங்குதடையின்றி தொடர வேண்டும்.
மின்சாரம் பயன்படுத்தும் ஒவ்வொரு வரும் தனியார் சேவை மய்யத்தில் ஒரு மின் அட்டைக்கு அவர்களின் சர்வீஸ் கட்டணமாக குறைந்தது ரூ.15.00, கூடுதலாக செலுத்த வேண்டிய கட்டாயத்தையும், சிரமத்தையும் ஏற்படுத்தியுள்ளது.