• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

செல்போனை இனி பயன்படுத்தினால் சஸ்பெண்டு- பேருந்து ஓட்டுநர்களுக்கு அரசு எச்சரிக்கை

ByP.Kavitha Kumar

Dec 23, 2024

பேருந்துகளை இயக்கும்போது ஓட்டுநர் செல்போன் பயன்படுத்தினால் 29 நாட்கள் சஸ்பெண்டு செய்யப்படுவார்கள் என தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

வாகன ஓட்டிகள் செல்போன் பயன்படுத்துவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக இரு சக்கர வாகனங்கள் முதல் நான்கு சக்கர வாகனங்கள் ஓட்டுபவர்கள் காதில் செல்போனை வைத்துக்கொண்டே ஓட்டுவதும், பலர் ஹெட்போன்களை மாட்டிக் கொண்டும் வாகனங்களை இயக்குவதால் சாலை விபத்துக்கள் அதிகம் ஏற்படுகின்றன. சமீப காலமாக அரசு பேருந்துகளை இயக்கும் ஒட்டுநர்களும், செல்போன்களைப் பயன்படுத்திக்கொண்டே பேருந்துகளை இயக்குவது அதிகரித்து வருகிறது. இதனால் பேருந்து விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்து ஓட்டுநர் ஒருவர் செல்போனை பேசியபடி பேருந்தை ஓட்டிச் சென்ற வீடியோ சமூக வலைத்தளத்தில் நேற்று வைரலானது. இதுகுறித்து விசாரணை நடத்திய போது செல்போன் பேசியபடி பேருந்தை ஓட்டிச் சென்றவர் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பணிமனையை சேர்ந்த ஓட்டுநர் கனகராஜ் என்பது கண்டறியப்பட்டது. அவர், தாம்பரத்தில் இருந்து திண்டிவனம் சென்றபோது செல்போன் பேசியபடி பேருந்தை ஓட்டியது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து கனகராஜை பணிநீக்கம் செய்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (விழுப்புரம்) உத்தரவிட்டுள்ளது

இந்த நிலையில், அரசு பேருந்து ஓட்டுநர்கள் பணியின்போது, செல்போனை பயன்படுத்தினால் 29 நாட்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என தமிழ்நாடு அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு பேருந்துகளை இயக்கும்போது ஓட்டுநர்கள் செல்போன் பயன்படுத்தினால் 29 நாட்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவர். தொடர்ந்து செல்போனை பயன்படுத்திக்கொண்டு ஓட்டுநர்கள் பேருந்துகளை இயக்கும் வீடியோ வெளிவருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, அனைத்து மண்டல அதிகாரிகளுக்கு போக்குவரத்துத்துறை சார்பில் உத்தரவு அனுப்பப்பட்டு ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.