• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

ஆர். ஜே. பாலாஜி நடிக்கும் ‘சொர்க்கவாசல்’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியீடு

Byஜெ.துரை

Nov 24, 2024

இயக்குநரும், முன்னணி நடிகருமான ஆர். ஜே. பாலாஜி முதன்மை வேடத்தில் நடித்திருக்கும் ‘சொர்க்கவாசல்’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப் பட்டிருக்கிறது. இதற்காக சென்னையில் அமைந்துள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற நிகழ்வில் முன்னணி நட்சத்திர இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் பிரபல‌ இசையமைப்பாளர் அனிருத் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு முன்னோட்டத்தை வெளியிட்டனர்.

அறிமுக இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘சொர்க்கவாசல்’ படத்தில் ஆர். ஜே. பாலாஜி, இயக்குநரும் நடிகருமான செல்வராகவன், ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி என்கிற நட்ராஜ், நடிகை சானியா ஐயப்பன், ஷஃரப் உதீன், ஹக்கீம் ஷா, பாலாஜி சக்திவேல், கருணாஸ், ரவி ராகவேந்திரா, அந்தோணி தாசன், சாமுவேல் ராபின்சன், எழுத்தாளர் ஷோபா ச‌க்தி, மௌரிஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பிரின்ஸ் ஆண்டர்சன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு கிறிஸ்டோ சேவியர் இசையமைத்திருக்கிறார். சர்வைவல் க்ரைம் திரில்லர் ஜானரிலான இந்த திரைப்படத்தை ஸ்வைப் ரைட் ஸ்டுடியோஸ் மற்றும் திங்க் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்திருக்கின்றன‌. உலகம் முழுவதும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் எஸ். ஆர். பிரபு மற்றும் எஸ். ஆர். பிரகாஷ் பாபு இணைந்து வழங்குகிறார்கள்.

முன்னோட்டத்தை வெளியிட்டு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசுகையில், “இந்தப் படத்தில் பணியாற்றிய அனைவரும் எனக்கு நன்கு அறிமுகமானவர்கள். முதலில் படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள். முன்னோட்டம் மிகவும் மனதிற்கு நெருக்கமானதாக இருக்கிறது. ஆறு மாதங்களுக்கு முன்பே இப்படத்தின் சில காட்சிகளை பார்த்திருக்கிறேன். அப்போது ‘ஆர்.ஜே பாலாஜி எனும் நடிகர் வருகை தருகிறார்’ என குறிப்பிட்டேன். படத்தை வெளியிடும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கும் என்னுடைய வாழ்த்துகள். இந்தப் படம் வெளியான பிறகு தான் என்னுடைய ‘கைதி 2’ படத்தில் ஏதேனும் மாற்றங்கள் செய்ய வேண்டுமா, இல்லையா என்பது தெரியவரும் . ஏனெனில் படத்தின் முன்னோட்டம் உணர்வுப்பூர்வமானதாகவும், மனதிற்கு நெருக்கமானதாகவும் இருந்தது என்றார்.

இசையமைப்பாளர் அனிருத் பேசுகையில், “சொர்க்கவாசல் படத்தின் தயாரிப்பாளர்களான சித்தார்த் ராவ் மற்றும் பல்லவி சிங் எங்கள் குழுவுடன் பதினோரு ஆண்டுகளாக பணியாற்றுகிறார்கள். அவர்களுக்கு திரைப்படம் தயாரிப்பதில் பெரு விருப்பம் உண்டு. அந்த வகையில் அவர்களுடைய ஸ்வைப் ரைட் ஸ்டுடியோஸின் முதல் திரைப்படமாக சொர்க்கவாசலை தயாரித்திருக்கிறார்கள். இந்தப் படத்தில் பணியாற்றிய அனைவரும் எனக்கு நெருக்கமான நண்பர்கள் தான். ஒளிப்பதிவு செய்திருக்கும் பிரின்ஸ் ஆண்டர்சன் மும்பையில் பிரபல ஒளிப்பதிவாளர் ரவி கே. சந்திரனின் மகனான சாண்டோவின் உதவியாளர். அவர் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகும் படம் இது. அற்புதமாக பணியாற்றியிருக்கிறார். அவருக்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது, அதற்காக மனதார வாழ்த்துகிறேன். எங்களுடைய குழுவில் ஒலி கலவை பொறுப்பினை பத்தாண்டுகளாக சிறப்பாக செய்து வரும் கலைஞர் வினய் ஸ்ரீதர் இதில் பணியாற்றி இருக்கிறார். இந்தப் படத்தின் தயாரிப்பில் இணைந்திருக்கும் திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனத்திற்கும் நன்றி. திரைப்படத்தை வெளியிடும் ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் அவரர்களுடைய அனுபவத்தால் இந்த படத்தை உலகம் முழுவதும் சிறப்பாக வழங்குவார்கள். இதற்காக அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் பள்ளியில் எனக்கு இரண்டு வருட ஜூனியர். அந்தத் தருணத்தில் அவருக்கு சினிமாவில் ஆர்வம் இருக்கிறது என்று எனக்குத் தெரியாது. அதன் பிறகு ஒரு நாள் என்னை சந்தித்து திரைப்பட இயக்குநராக வேண்டும் என தெரிவித்தார். அதன் பிறகு ஒரு இயக்குநரிடம் உதவி இயக்குநராக சேர்ந்து, மூன்று திரைப்படங்களில் பணியாற்றி ‘சொர்க்கவாசல்’ திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறார். இந்தப் படத்தின் கதையை முழுவதுமாக விவரித்துவிட்டு, யார் நாயகனாக நடித்தால் நன்றாக இருக்கும் என என்னிடம் கேட்டார். நான் அப்போது இதற்கு என்னுடைய நண்பரான ஆர். ஜே. பாலாஜி தான் பொருத்தமானவராக இருப்பார் என்று மனதில் பட்டதை உடனே சொன்னேன். இந்த படத்தினை பார்த்து விட்டேன், என்னுடைய நண்பர்கள் அனைவரும் இணைந்து ஒரு தரமான படைப்பை உருவாக்கி இருக்கிறார்கள் என்று மகிழ்ந்தேன். நான் இசையமைப்பாளராக வாழ்க்கையை தொடங்கும் போது ஆர். ஜே. பாலாஜி பண்பலை வானொலியில் தொகுப்பாளராக புகழ்பெற்று இருந்தார். அப்போது அவருடன் பேசுவது எங்களுக்கெல்லாம் பெருமிதமாக இருக்கும். ஆர் ஜே வாக கலை உலக பயணத்தை தொடங்கி இன்று நடிகராக உயர்ந்திருக்கிறார். அவர் நடித்த படங்கள் அனைத்தும் கமர்ஷியலாக வெற்றி பெற்று இருக்கின்றன‌. அவர் நடிக்கும் படங்களுக்காக‌ கடினமாக உழைப்பார். காமெடியனாக நடித்திருக்கிறார், கமர்ஷியலாக நடித்திருக்கிறார், ஆனால் இந்த திரைப்படத்தில் அவர் ஒரு அற்புதமான நடிகராக உருமாற்றம் பெற்றிருக்கிறார். செல்வராகவன் இந்தத் திரைப்படத்திற்கு ஒரு தூணாக இருக்கிறார். என்னுடைய கலை உலக பயணத்தையும், இசைப்பயணத்தையும் நேர்த்தியாக வடிவமைத்ததில் செல்வராகவனுக்கும் கணிசமான பங்கு உண்டு. இந்த படத்தில் இணைந்து பணியாற்றியதற்காக அவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்று அனைவரது வாழ்விலும் சொர்க்கவாசல் திறக்கும் என்று நம்புகிறேன் என்றார்.

இயக்குநரும், நடிகருமான செல்வராகவன் பேசுகையில், “இந்த திரைக்கதையை முழுவதுமாக படித்துவிட்டு இயக்குநரிடம் நீங்கள் தான் எழுதினீர்களா, இதை யார் எழுதினார்கள் எனக் கேட்டேன். இதனை படப்பிடிப்பு நிறைவு செய்யும் வரை கேட்டுக் கொண்டே இருந்தேன். ஏனெனில் இப்படி ஒரு திரைக்கதையை எழுத முடியுமா என்பது ஆச்சரியமாக இருக்கிறது. இதை நான் இந்த தருணத்தில் சொல்வது சற்று மிகைப்படுத்தலாகவே இருக்கும், இருந்தாலும் படம் வெளியான பிறகு நீங்கள் அதை உண்மை என்று ஒப்புக் கொள்வீர்கள். இது போன்றதொரு திரைக்கதையை எழுதுவது சாதாரணமான விஷ‌யம் அல்ல, வாசிக்கும் போது எனக்கு சற்று பொறாமையாகவே இருந்தது.

நல்ல படம் வரவேண்டும் என்று நிறைய பேசுகிறோம். ஆனால் அது குறித்து யாரும் முயற்சி செய்வதில்லை. இந்த படம் நிச்சயம் வித்தியாசமானதாக இருக்கும். இதற்கு நான் உத்தரவாதம் அளிக்கிறேன். இந்தத் திரைப்படத்தை ரசிகர்களுடன் திரையரங்குகளில் காண்பதற்கு நானும் ஆவலாக காத்திருக்கிறேன் என்றார்.

நடிகை சானியா ஐயப்பன் பேசுகையில், “ஆர். ஜே. பாலாஜியுடன் இணைந்து நடித்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் இதுவரை இது போன்ற கதாபாத்திரங்களை ஏற்று நடித்ததில்லை. அற்புதமான வாய்ப்பை வழங்கிய இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி. 29ம் தேதி முதல் படம் திரையரங்குகளில் வெளியாகிறது, அனைவரும் திரையரங்கத்திற்கு சென்று பார்த்து ரசித்து ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் பேசுகையில், அறிமுக இயக்குநருக்காக இப்படி ஒரு பிரம்மாண்டமான மேடையை வழங்கிய அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். படத்தைப் பற்றி அதிகம் பேசாமல் இதில் நடித்த நடிகர்கள், நடிகைகள், பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களைப் பற்றி பேசுவதற்கு முன் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த திரைப்படத்தில் ஆர் ஜே பாலாஜி- செல்வராகவன் -பாலாஜி சக்திவேல்- கருணாஸ் -நட்டி- என பத்திற்கும் மேற்பட்ட முன்னணி நட்சத்திரங்கள் பணியாற்றினார்கள். அவர்கள் அறிமுக இயக்குநர் என்று எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் தங்களின் முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார்கள்.

நைஜீரிய நாட்டில் இருந்து சாமுவேல் ராபின்சன் என்ற நடிகர் இங்கு வருகை தந்து நடித்தார். கேரளாவில் இருந்து ஷஃரப் உதீன் -ஹக்கீம் ஷா- சானியா ஐயப்பன்- என மூன்று நட்சத்திரங்கள் இந்த படத்தில் பணியாற்றினார்கள்.

இந்த மேடைக்காக… மேடைக்கு வருவதற்காக வழி அமைத்துக் கொடுத்தவர் இயக்குநர் பா. ரஞ்சித். அவரிடம் ஆறு ஆண்டுகள் பணியாற்றினேன். நிறைய விஷ‌யங்களை கற்றுக் கொண்டேன். அதற்காக அவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

சொர்க்கவாசல் படத்தின் கதையை மூன்றாண்டுகளுக்கு முன் ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எழுத திட்டமிட்டோம். ‘வடசென்னை’, ‘விருமாண்டி’ என இதற்கு முன் வெளியான கல்ட் திரைப்படங்களை பார்த்தோம். அதன் பிறகு இந்த படைப்பை வித்தியாசமான கோணத்தில் வித்தியாசமாக வழங்கலாம் என தீர்மானித்தோம். இதற்காக ராஜமுந்திரியில் உள்ள சிறைக்குச் சென்று சிறை கைதிகளுடன் பேசினோம். அந்தத் தருணத்தில் தவறே செய்யாமல் ஏராளமானவர்கள் சிறையில் இருப்பதை கண்டோம். அவர்களை விசாரணை கைதி என குறிப்பிடுவார்கள். இந்தியாவில் 70 சதவீதத்திற்கு மேல் சிறையில் விசாரணை கைதிகள் தான் இருக்கிறார்கள் என்ற ஒரு தகவலும் கிடைத்தது. இவர்களுக்கு நீதிமன்றம் இதுவரை எந்த தண்டனையும் வழங்கவில்லை. இருந்தாலும் இவர்கள் சிறையில் இருக்கிறார்கள். அவர்களிடம் உரையாடும்போது அவர்களிடம் இருந்த ஒரே விஷ‌யம் நம்பிக்கை. அவர்கள் என்றாவது ஒருநாள் இந்த சொர்க்கவாசல் திறந்து வீட்டிற்குச் சென்று குடும்பத்தினருடன் வாழலாம் என நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். அந்த விஷ‌யம் இந்தப் படத்தில் இடம் பிடித்திருக்கிறது. இது பார்வையாளர்களுடன் எளிதில் தொடர்பு கொள்ளும் என நம்புகிறேன். எமோஷனல் வித் ஆக்ஷ‌ன் திரில்லராக இந்த திரைப்படம் இருக்கும். இர‌ண்டு மணி நேரம் பத்து நிமிடம் அளவிற்கு இந்த திரைப்படத்தை நாங்கள் உருவாக்கி இருக்கிறோம். இந்த படைப்பை ரசிகர்களாகிய நீங்கள் எப்படி வரவேற்பு அளிப்பீர்கள் என்ற ஆவலுடன் காத்திருக்கிறேன் என்றார்.

நடிகர் ஆர். ஜே. பாலாஜி பேசுகையில், அனைவருக்கும் வணக்கம். பிரதம மந்திரி- ஜனாதிபதி -முதலமைச்சர் – ஆகிய மூவரைத் தவிர அனைவருக்கும் நன்றி சொல்லி விட்டோம். இந்த குழுவுடன் எனக்கு ஒன்றரை ஆண்டு கால பயணம் இருக்கிறது. இந்தப் படத்தில் நிறைய அறிமுக கலைஞர்கள் பணியாற்றி இருக்கிறார்கள். இதனால் அவர்கள் அனைவரும் தங்களுக்கு உதவியவர்களுக்கு நன்றி தெரிவித்தார்கள். நான் கீழே அமர்ந்திருக்கும் போது மேடையில் பேசிய அனைவரின் பேச்சையும் ரசித்து கேட்டேன். அதேபோல் கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக இவர்கள் படத்தை ரசித்து ரசித்து எடுப்பதையும் பார்த்து இருக்கிறேன். நான் நடித்த ஒரு படத்தை ரிலீஸிற்கு நான்கு நாள் இருக்கும் இந்த தருணத்திலும் நான் இதுவரை பார்க்கவில்லை. அதற்கு காரணம் நான் இவர்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கை. இந்தப் படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பளித்ததற்காக இயக்குநர் சித்தார்த்திற்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னிடமிருந்து நடிப்பை அவர் வாங்கினார். அவரிட‌த்தில் எழுத்து வடிவத்தில் முழு திரைக்கதையும் இருந்தது. இதற்காக உழைத்த எழுத்தாளர்கள் தமிழ் பிரபா – அஸ்வின் ரவிச்சந்திரன் மற்றும் சித்தார்த்துக்கு நன்றி.

இந்தப் படத்தில் டீசர் வெளியானவுடன் என்னுடைய நண்பர்களான நிறைய ஹீரோக்கள் இயக்குநருக்கு போன் செய்து பாராட்டி இருக்கிறார்கள். இந்தப் படத்தின் முன்னோட்டம் மற்றும் படம் வெளியான பிறகு அவருக்கு மிகப்பெரிய வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என பிரார்த்திக்கிறேன்.

படப்பிடிப்பு தளத்தில் அவருடைய குழுவினரை நான் கலாய்த்து இருக்கிறேன். ஏனென்றால் அவர்கள் எப்போதும் ஆங்கிலத்தில் உரையாடிக் கொண்டிருப்பார்கள். உதவி இயக்குநராக பணியாற்றிய அருண் – இந்த படத்தில் ஒரு பாடலை எழுதி இருக்கிறார்.

செல்வராகவன் திரையில் தோன்றினாலே பெரிய நட்சத்திர நடிகர் போல் இருக்கும். படப்பிடிப்பு தளத்தில் அவர் எப்போதும் அமைதியாக இருப்பார். அவருக்கு நண்பர்களும் குறைவு. படபிடிப்பு தளத்தில் மிக குறைவாகவே பேசுவார். மிகப்பெரிய ஸ்டார் இந்த படத்தில் இருக்கிறார் என்ற உணர்வே எங்களுக்கு இருந்தது.

மேலும் இந்தப் படத்தில் நடித்திருக்கும் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் படம் எனக்கு ஸ்பெஷலானது. ஏனெனில் படத்தை இயக்கிய சித்தார்த் 15 ஆண்டு காலத்திற்கு முன் நான் கிரிக்கெட் விளையாடும் போது எனக்கு பின்னால் நின்று கொண்டிருப்பான். அவனது இயக்கத்தில் நடித்திருக்கிறேன்.

நான் சூர்யாவின் படத்தை இயக்கிக் கொண்டிருப்பதற்கும், இப்படத்தின் தயாரிப்பாளரான சித்தார்த் ராவிற்கு பங்கு உண்டு. அவருடைய முதல் பட தயாரிப்பில் நானும் இடம் பெற்றதற்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நிகழ்வு எனக்கு மிகவும் ஸ்பெஷல் ஆனது. ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ படம் வெளியான தருணத்திலிருந்து இதுவரை 13 ஆண்டுகள் கடந்து விட்டது. என்னுடைய மனைவி திவ்யா நாகராஜன் இந்த நிகழ்விற்கு வருகை தந்திருக்கிறார். அவர் கலந்து கொள்ளும் முதல் சினிமா நிகழ்வு இதுதான்.

சொர்க்கவாசல் படத்தை பற்றி பேசுவதில் எனக்கு உடன்பாடு இருந்ததில்லை. இந்த படம் நன்றாக வந்திருக்கிறது. பார்த்தவர்கள் அனைவரும் பாராட்டுகிறார்கள். இந்தப் படத்தின் டீசருக்கும் பெரும் வரவேற்பு கிடைத்தது. தற்போது படத்தின் முன்னோட்டம் வெளியாகி இருக்கிறது. இதற்கும் பெரும் வரவேற்பு கிடைக்கும் என்று நம்பிக்கை இருக்கிறது.

இதற்கு முன் ஒரு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சர்ச்சையை ஏற்படுத்து வகையில் எதையாவது பேச வேண்டும் என்று இருந்தது. ஆனால் நான் தற்போது என்ன நினைக்கிறேன் என்றால்.. பேசுவதற்கு எதுவும் இல்லை என்றாலும் பரவாயில்லை. படத்தின் கன்டென்ட் நன்றாக இருந்தால் அது மக்களிடம் ரீச் ஆகிவிடும்.

நான் 2006ம் ஆண்டிலிருந்து இதைத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறேன். விற்பனை செய்வதற்காக ஒரு கடைக்கு நாம் பிஸ்கட்டை எடுத்து சென்று விட்டால் அதை மற்றவர்கள் நன்றாக இருக்கிறது.
இல்லை என்று சொல்லத்தான் செய்வார்கள். அதேபோல் தான் சினிமாவும். ரசிகர்களை சென்றடைந்த பின் ஒரு படத்தைப் பற்றி அவர்கள் விமர்சனம் செய்வார்கள்.

ஒரு படம் வெளியான பிறகு அதைப்பற்றி யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் விமர்சிக்கலாம். யூடியூபில் விமர்சிக்கலாம்… ட்விட்டரில் விமர்சிக்கலாம் .. இன்ஸ்டாகிராமில் விமர்சிக்கலாம். அது அவர்களுடைய சுதந்திரம். யாரும் அவர்களிடத்தில் இருக்கும் செல்போனை பறிக்க முடியாது. அதனால் விமர்சனம் குறித்த கட்டுப்பாடு நம்மிடத்தில் இல்லை.

சொர்க்கவாசல் படத்தில் கன்டென்ட் நன்றாக இருக்கிறது. இந்தப் படத்தை பார்த்து நன்றாக இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காகத் தான் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இவர்கள்தான் என்னுடைய அடுத்த படத்தின் தயாரிப்பாளர்கள். இந்தப் படத்தின் விநியோகஸ்தர்கள்.

போட்டிகள் நிறைந்த சூழலில் ஓடிடி எனப்படும் டிஜிட்டல் ரைட்ஸ் விற்பது கடினமாக இருக்கும். ஆனால் நல்ல தொகையை கொடுத்து இப்படத்தின் உரிமையை வாங்கி இருக்கும் நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் எங்கள் குழு மீது வைத்த நம்பிக்கைக்கும் நன்றி தெரிவிக்கிறேன் என்றார்.