கோவை- மேட்டுப்பாளையம் சாலை கவுண்டம்பாளையம் அருகே உள்ள எருக்கம்பெனி பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை தரம் பிரிக்கும் குடோன் செயல்பட்டு வருகிறது. இந்த குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு கரும்புகை எழுந்துள்ளது. இதனை பார்த்த ஊழியர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து கோவை தெற்கு மற்றும் வடக்கு தீயணைப்பு துறையினர் நான்கு தீயணைப்பு வாகனங்களில் சென்று தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் ஜேசிபி இயந்திரத்தின் மூலம் குடோன் சுவர்களை இடித்தும் தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் அந்த குடோனில் இருந்த பெரும்பாலான குப்பைகள் முற்றிலும் எரிந்தன.
மேலும் சம்பவ இடத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் நேரில் பார்வையிட்டார். இந்த விபத்திற்கு என்ன காரணம் என்பது குறித்து கவுண்டம்பாளையம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தீ விபத்தால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.









