கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோவில் சொத்தை சிறப்பு நிலை பேரூராட்சி உரிமை கொண்டாட முடியாது. குமரி மாவட்ட அறநிலையத்துறை அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தவை.

கன்னியாகுமரி மாவட்ட திருக்கோயில்கள் நிர்வாகத்திற்குட்பட்டு 490 திருக்கோயில்கள் உள்ளன. பரந்து விரிந்து இருக்கும் திருக்கோயில்களில் முதன்மையானதது குமரியிலுள்ள கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் திருக்கோயில் ஆகும் . உள்ளூர் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்ய வருகின்றனர். உலக புகழ்பெற்ற இத்திருக்கோயில் கேரளாவிலிருந்து தமிழ் நாட்டிற்கு மொழி வாரி மாநில பிரிவின் போது திருவிதாங்கூர் சமஸ்தானத்திலிருந்து 1956 ம் வருடம் தமிழ் நாட்டு உடன் இணைக்கப்பட்டது.

கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் திருக்கோயிலுக்கு பழைய சர்வே எண்.1/1 ல் 8 ஏக்கர் 17 சென்ட் இடம் மறுநில அளவைக்கு முன் சென்டில்மென்ட் பதிவின் படி குமரி பகவதியம்மன் கோவில் என உள்ளது. 1960 ம் ஆண்டிற்கு பிறகு நடந்த மறுநில அளவையில் 679/1 ல் 1.36.5 ஹெக்டேர்ஸ் க்கு நிகரான 3 ஏக்கர் 17 சென்ட் இடமும் , 679/2 ல் 1.09.0 ஹெக்டேர்ஸ் க்கு நிகரான 2 ஏக்கர் 69 சென்ட் இடம் கோவில் வகை என சென்டில்மென்டில் பதிவு உள்ளது. மொத்தம் 5 ஏக்கர் 86 சென்ட் இடம் உள்ளது . மீதமுள்ள 2 ஏக்கர் 30 சென்ட் இடம் அப்போது பொதுப்பணித்துறைக்கு இந்து சமய அறநிலையத்துறையின் அனுமதியுடன் காந்தி மண்டபம் கட்டுவதற்கு ஒப்படைக்கப்பட்டது. இதற்கு ஈடாக தற்போது அருங்காட்சியாகம் இருக்கும் இடம் திருக்கோயிலுக்குக் கொடுக்கப்பட்டு திருக்கோயில் நிருவாகத்தால் வாடகை வசூலிக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு இந்து சமய அறநிலையக்கொடைகள் சட்டம் 1959 ன் 97- D பிரிவின் படி திருக்கோயில் சொத்துக்கள் வருவாய் ஆவணங்களில் திருக்கோயில் வகை அல்லது கோவில் புறம்போக்கு வகை என பதிந்துள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் திருக்கோயிலுக்கு உடையதாகும் . பிற அரசு சார்பு துறைகள் கோவில் நிலத்தை உரிமை கொண்டாட முடியாது. பராமரிப்பு பணிகள் செய்வதற்கும் இந்துசமய அறநிலையத்துறை , ஆணையரிடம் உரிய அனுமதி பெற வேண்டும். கன்னியாகுமரி பகவதியம்மன் கோவில் சுற்றுலா தலம் என்பதால் கடற்கரை மற்றும் சுற்றுப்பகுதிகள் பேரூராட்சி நிர்வாகத்தால் சுத்தம் மற்றும் சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகளை செய்து வருகிறது. இதனை வைத்துக் கொண்டு பேரூராட்சி நிர்வாகத்தால் உரிமை கொண்டாட முடியாது என தெரிவித்தார்.








