தீபாவளி பண்டிகை முன்னிட்டு திண்டுக்கல் நாகல் நகர் ஆட்டுச் சந்தையில் ஆடு படுஜோராக விற்பனை நடைபெற்று வருகிறது. விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
திண்டுக்கல் நாகல் நகர் பகுதியில் வாரம் தோறும் திங்கட்கிழமை காலை ஆடுகள் மற்றும் கோழி விற்பனை சந்தை நடைபெற்று வருகிறது. இங்கு திண்டுக்கல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள வெள்ளோடு, பஞ்சம்பட்டி, சின்னாளப்பட்டி, சிலுவத்தூர், நத்தம் உள்ளிட்ட பகுதியில் இருந்து ஏராளமான விவசாயிகள் தங்களுடைய ஆடுகளை விற்பனை செய்வதற்காக கொண்டு வருகின்றனர். மேலும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான வியாபாரிகள் இந்த சந்தையில் இருந்து ஆடு மற்றும் கோழிகளை வாங்கி செல்வது வழக்கம். இந்நிலையில் தீபாவளி பண்டிகைக்கு இன்னும் இரண்டு தினங்களே உள்ள நிலையில் இன்று நடைபெற்ற ஆட்டுச் சந்தையில் வழக்கத்தைவிட ஆடுகளின் விற்பனை படுச்சோராக நடைபெற்றது. 10 கிலோ எடை கொண்ட ஆடு ஒன்று 7000 முதல் 8000 ரூபாய் வரை விற்பனையானது. இதேபோல் நாட்டுக்கோழி கிலோ 500 முதல் 600 ரூபாய் வரை விற்பனையானதால் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.








