தமிழகத்தின் 9 மாவட்டங்களில், இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது..,
“தமிழகத்தில் இன்றும் நாளையும் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மாநகர், புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
நகரின் ஒருசில பகுதிகளில், லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. கேரள கடலோரம் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் இன்று சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்” என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
