மதுரை அரசு மருத்துவமனை பராமரிப்பு பணியில் ஈடுபட்ட தொழிலாளர் தவறி விழுந்து படுகாயமடைந்தார்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை கட்டடங்களில் பொதுப்பணித்துறை சார்பில் பராமரிப்பு பணிகள் நடைபெற்றுவருகிறது. இதில் உடைந்து ஜன்னல்களை மாற்றுவது, பழுதடைந்துள்ள சுவர்களுக்கு சிமெண்ட் பூசும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இதில் 20க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அண்ணா பேருந்துநிலையம் அரசு ராஜாஜி விபத்து சிகிச்சை மருத்துவமனையில் பராமரிப்பு பணியான ஜன்னல் பொறுத்தும் பணி நடைபெற்று வந்துள்ளது. அப்போது கயிறுகள் மூலமாக தொங்கியபடி பணிகளை மேற்கொண்டு வந்துள்ளனர்.
அப்போது பணியில் ஈடுபட்டு வந்த மதுரை நரிமேடு மருதுபாண்டியர் நகர் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் என்ற தொழிலாளி கீழே தவறி விழுந்து படுகாயமடைந்தார். இதனையடுத்து விபத்து சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்

மதுரை அரசு மருத்துவமனையில் பொதுப்பணி துறையின் கீழ் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றாமல் பணிபுரிந்த நிலையில் தவறி விழுந்து படுகாயமடைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.