கன்னியாகுமரி பகுதியில் அனைத்து கடைகள் அடைத்து இறுதி அஞ்சலி. தமிழ் நாடு வணிகர் சங்க தலைவர் வெள்ளையன் உடல் நலக்குறைவால் நேற்று முன்தினம் (செப்டம்பர்_10) ம் தேதி சென்னையில் மரணமடைந்தார்.
வெள்ளையனின் பூத உடலுக்கு அமைச்சர் சேகர் பாபு, சபாநாயகர் அப்பாவு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்.டி.சேகர், தாயகம் கவி உட்பட பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள்.

மறைந்த வெள்ளையனின் பூத உடலை சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள பிச்சிவிளை கிராமத்திற்கு இன்று (செப்டம்பர்_12) கொண்டு வரப்பட்டு இறுதி அஞ்சலிகளுக்கு பின் மாலையில் நல்லடக்கம் நடக்க இருக்கும் நிலையில், கன்னியாகுமரி அதன் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளது. இதை போன்று நாகர்கோவில், தக்கலை, கருங்கல் பகுதிகளில் பெரும்பான்மையான கடைகள் அடைத்து மறைந்த தங்களது தலைவர் வெள்ளையனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள் வியாபாரிகள்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும்பான்மையான சாலை சந்திப்புகளில் வெள்ளையனின் படத்துடன் அஞ்சலி பானர்கள் வைக்கப்பட்டுள்ளது.

உலக சுற்றுலா பயணிகளின் சங்கமம் பகுதியான கன்னியாகுமரி பார்க் புதிய பசார், காந்திஜி கடை வியாபாரிகள் சங்கம், கடற்கரை, தமிழன்னை, அருள்மிகு பகவதியம்மன் வளாகம், திருக்கோவில் வியாபாரிகள் மற்றும் விவேகானந்தர், தென்குமரி என அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர்கள் தங்கள் வியாபாரம் சங்கங்களின் சார்பில் தமிழ் நாடு வணிகர் சங்க தலைவர் வெள்ளையன் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வண்ணம் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளது. அனைத்து சங்கத்தினரும் மறைந்த அவர்களது அமைப்பின் தலைவர் வெள்ளையனின் இறுதி சடங்கில் பங்கேற்க “பிச்சிவிளை” கிராமத்திற்கு சென்று இறுதி சடங்கு நிகழ்வில் பங்கேற்கிறனர்.

