கோவை சின்ன வேடம்பட்டி அடுத்த உடையாம்பாளையம் பகுதியில் உயர் மின்னழுத்த கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசி தீ பற்றியதன் விளைவாக அருகில் இருந்த பாலாஜி குஷன் என்ற சோபா தயாரிக்கும் நிறுவனத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சுமார் 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையாயின.
கோவை சரவணம்பட்டி அடுத்த விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த மூக்கையா என்பவர் சின்னவேடம்பட்டி அடுத்த உடையாம்பாளையம் அருகே பாலாஜி குஷன் ஒர்க் என்ற பெயரில் சோபா மற்றும் மர சாமான்கள் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.கடந்த இரண்டு ஆண்டுகளாக செயல்பட்டு வரும் அந்த நிறுவனத்தில் வட மாநிலங்களைச் சேர்ந்த ஏழு பேர் பணியாற்றி வருகின்றனர்.இந்த நிலையில் இன்று பிற்பகல் ஊழியர்கள் அனைவரும் உணவு அருந்துவதற்காக வெளியில் வந்த நிலையில் சோபா கம்பெனியிலிருந்து கடுமையான கரும்புகை வெளியேறியது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் அங்கு சென்று பார்த்த போது தீ பற்றி எரியவே தீயை அணைக்க முற்பட்டுள்ளனர்.ஆனால் அதிக அளவிலான தீ பரவி கரும்புகை வெளியேற அவர்கள் உடனடியாக தீயணைப்பு துறை மற்றும் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர்.இதையடுத்து விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் மூன்று வாகனங்கள் மூலம் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடியும் தீ கட்டுக்கடங்காமல் அந்த நிறுவனத்தில் இருந்த சுமார் 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான சோஃபாக்கள், மர சாமான்கள் மற்றும் பஞ்சு உள்ளிட்டவற்றை தீக்கிரையாக்கியது. மேலும் அருகில் இருக்கும் வீடுகள் மற்றும் நிறுவனங்களில் தீ பரவாமல் தடுக்கும் வகையில் தீயணைப்பு படையினர் தொடர் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே சம்பவ இடத்தில் சரவணம்பட்டி காவல் நிலைய போலீசார் தீ விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து அந்த நிறுவனத்தில் பணியாற்றும் வட மாநில தொழிலாளர்களிடமும் சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர். முன்னதாக நடத்தப்பட்ட முதல் கட்ட விசாரணையில் நிறுவனத்திற்கு அருகே செல்லும் உயர் மின்னழுத்த கம்பிகள் காற்றின் காரணமாக ஒன்றோடு ஒன்று உரசி தீப்பொறி பறந்ததாகவும் அந்த தீப்பொறி பட்டு சோபா நிறுவனத்தில் இருந்த பஞ்சு தீப்பிடித்து தீ விபத்து ஏற்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது.
