கோவை வனப்பகுதியில் இருந்து வழி மாறி பாக்கு தோட்டத்தில் குட்டியோடு புகுந்த காட்டு யானைகள், குட்டியை அரண் போல காத்து நிற்கும் மூன்று காட்டு யானைகளின் டிரோன் வீடியோ காட்சி வெளியாகின.
கோவை, ஆலாந்துறை பூண்டி மலைப் பகுதியில் இருந்து வெளியே வந்த காட்டு யானைகள் செம்மேடு பகுதியில் பாக்கு தோட்டத்தில் முகாமிட்டு இருப்பதால் 20 க்கும் மேற்பட்ட வனத் துறையினர் யானையை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை ஆலந்துறை அடுத்த செம்மேடு கிராமப் பகுதிக்குள் இன்று அதிகாலை பத்துக்கு மேற்பட்ட காட்டு யானைகள் உலா வந்ததால் போலுவாம்பட்டி வனத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த வனத்துறையினர் காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் இரு பகுதி நின்று விரட்டும் போது ஆறு யானைகள் அடர்ந்த வனப் பகுதிக்குள் விரட்டினர் மீதமுள்ள நான்கு யானைகள் மற்றும் குட்டி உடன் மோகன் என்பவரின் பாக்கு தோட்டத்தில் முகாமிட்டதால் யானையை விரட்டும் பணி தற்போது நிறுத்தி வைக்கப்பட்டது. இன்று அமாவாசை என்பதால் பூண்டி வெள்ளிங்கிரி மலைக்கு அதிக அளவில் பொதுமக்கள் வந்து கொண்டு இருக்கின்றனர். அதனால் அவர்களுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படாமல் இருக்க காட்டு யானையை மாலை நான்கு மணிக்கு மேல் அடர்ந்த வனப் பகுதியில் விரட்டும் பணி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.
கடந்த 10 நாட்களாகவே 10 க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் ஆலந்துறை செம்மேடு முள்ளங்காடு உள்ளிட்ட பகுதிகளில் முகாமிட்டு இரவு நேரங்களில் அங்குள்ள கடைகள் மற்றும் விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருவது தொடர் கதை ஆகிவிட்டது என்று அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
தற்போது அப்பகுதியில் முகாமிட்டு உள்ள காட்டு யானை டிரோன் கேமரா மூலம் வீடியோ எடுக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.